பெங்களூர் தண்ணீர் தட்டுப்பாடு கோப்புப்படம்
இந்தியா

பெங்களூர் தண்ணீர் தட்டுப்பாடு... மாறி மாறி குற்றம்சாட்டும் கட்சிகள்! உண்மை என்ன?

பெங்களூரில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படும் நிலையில், இதுகுறித்து கட்சிகள் அனைத்தும் மாறி மாறி குற்றம்சாட்டிக்கொள்கின்றன.

Angeshwar G

பெங்களூரு நகரில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது எனக் கூறப்பட்டுள்ளது. நகரில் 3,000க்கும் மேற்பட்ட ஆழ்த்துளை கிணறுகள் நீரின்றி வறண்டு காணப்படுவதால் மக்கள் தண்ணீர் லாரியை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட எல்லைகளுக்குள் போர்வெல் அமைப்பதென்றால், முன் அனுமதி கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது.

தண்ணீர் தட்டுப்பாடு

கோடைக்காலம் தொடங்கும் முன்பே...

கோடைகாலம் தொடங்கும் முன்பே பெங்களூருவில் தண்ணீர் பிரச்னை தொடங்கிவிட்டது. இந்தியாவில் மூன்றாவது அதிகமான மக்கள் தொகை கொண்ட பெங்களூருவில் கிட்டத்தட்ட ஒரு கோடியே 40 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், மக்களின் அன்றாட தண்ணீர் தேவையில் 1,500 மில்லியன் லிட்டர் பற்றாக்குறை உள்ளது. மார்ச் முதல் மே மாதம் வரை மட்டும் சுமார் 8 ஆயிரம் மில்லியன் கன அடி தேவை இருப்பதாக கர்நாடக அரசு கூறியுள்ளது. தற்போது 34 டிஎம்சி தண்ணீர் மட்டுமே நீர்த்தேக்கங்களில் உள்ளது.

நிறுவனங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள்...!

பல சர்வதேச நிறுவனங்கள் பெங்களூரில் செயல்படுகின்றன. பல மாநிலங்களில் இருந்தும் மக்கள் சென்று அங்கு வேலை செய்கின்றனர். இதனால் மக்கள்தொகை அங்கு அதிகரித்துள்ளது. ஆகையால் தண்ணீர் தேவை வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதை கருத்திகொண்டு, மழைக்காலம் வரை ஊழியர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பி வீடுகளில் இருந்து வேலை செய்ய பல கார்ப்பரேட் நிறுவனங்கள் அறிவுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தண்ணீர் பற்றாக்குறையை சற்றே சமாளிக்கலாம் என்று நிறுவனங்கள் கருதுகின்றன.

தண்ணீர்

போலவே தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு தனியார் பள்ளிகள், பயிற்சி மையங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த முடிவு செய்துள்ளன. தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீரை வாகனங்களை சுத்தம் செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றனர். கால்நடைகளை வளர்ப்பவர்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

அரசின் நடவடிக்கை என்ன?

பெங்களூர் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம், நீச்சல் குளங்களில் குடிநீரை பயன்படுத்த தடைவிதித்துள்ளது. திரையரங்குகள், மால்கள் போன்ற பொழுதுபோக்கு இடங்களிலும், மற்ற இடங்களிலும் குடிநீர் தேவைகளைத் தவிர, நீரூற்று, வாகனம் சுத்தம் செய்வது, கட்டடங்களைக் கட்டுவது போன்றவற்றிற்கு குடிநீரை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.

உத்தரவை மீறுபவர்களுக்கு ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 15 ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் அடிப்படை தேவைகளுக்குக் கூட தண்ணீர் இன்றி அவதிப்படுகின்றனர். தீயணைப்புத் துறையினருக்கும் போதிய நீர் கிடைப்பதில்லை எனவும் விபத்துகள் ஏதும் நடக்கும்போது கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகிறோம் எனவும் அதிகாரிகள் தெரிவித்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தண்ணீர் தட்டுப்பாடு

டிகே சிவக்குமார் குற்றச்சாட்டு!

பாஜகவினர் தண்ணீர் தட்டுப்பாட்டை அரசியலாக்குவதாக கர்நாடக துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். “பெங்களூருவில் தண்ணீர்ப் பஞ்சம் இல்லை. பஞ்சம் என்ற தோற்றத்தை உருவாக்குவது பாஜகதான். அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் முன் மத்திய அரசிடம் இருந்து மேகதாது திட்டத்திற்கு பாஜக அனுமதி பெற்றுத் தர வேண்டும். பெங்களூருவுக்கு தண்ணீர் வழங்குவதே எங்கள் முன்னுரிமை” என தெரிவித்துள்ளார்.

பாஜக எம்.பி. தேஜஸ்வி கூறுகையில், “பெங்களூருவில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சம் குறித்து காங்கிரஸ் முன்கூட்டியே அறிந்து, மக்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டு, தமிழகத்தில் கூட்டணி கட்சியை மகிழ்விப்பதற்காக தண்ணீரை திறந்துவிட்டது” என தெரிவித்துள்ளார்.

"Banglore தண்ணீர் பஞ்சம் தனியார் முதலாளிகள் லாபத்துக்காக உருவாக்குறாங்க..."

இந்த தண்ணீர் பஞ்சம் குறித்து புதிய தலைமுறை டிஜிட்டல் நேர்காணலில் காவிரி உரிமை மீட்புக் குழுவின் செயற்குழு உறுப்பினர் அருணாபாரதி, பெங்களூருவில் தற்போது உள்ள தண்ணீர் தட்டுப்பாட்டிற்கான காரணம் குறித்தும், காவிரி பிரச்சனை குறித்தும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். இந்த பஞ்சமே தனியார் முதலாளிகளின் லாபத்துக்காக உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை பஞ்சம் என அவர் கடுமையாக சாடினார். அவர் கூறியவற்றை, விரிவாக கீழ் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் அறியலாம்...