பிரதமர் மோடி  file image
இந்தியா

தொடங்கியது நாடாளுமன்ற கூட்டத்தொடர் - நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேசியது என்ன?

ஜெனிட்டா ரோஸ்லின்

பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின் முதன்முறையாக தற்போது 18 ஆவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இந்தவகையில், நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர்களுக்கு இடைக்கால சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக, நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், “முதன்முறையாக புதிய நாடாளுமன்றத்தில் மக்களவை எம்பிக்கள் பதிவியேற்பு நடக்கிறது. இந்நாளை கொண்டாடும் வாய்ப்பை நாடாளுமன்ற வளாகம் பெற்றுத் திகழ்கிறது. மக்களவை உறுப்பினர்கள் அனைவரையும் உளமாற வரவேற்கிறேன்.

எங்களுடைய நோக்கம், செயல்பாடு ஆகியவற்றுக்காகவே 3 ஆவது முறை மக்கள் வாய்ப்பளித்துள்ளனர். நாட்டுக்கு சேவையாற்றவும், 140 கோடி மக்களின் கனவை நனவாக்கவும் எம்பிக்கள் பாடுபட வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு நிலையான ஆட்சி முக்கியம்.

இந்த மக்களவையில் இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. மக்கள் நல திட்டங்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம்.

நாளை ஜனநாயகத்திற்கு களங்கம் ஏற்பட்டதன் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் (எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட தினத்தை குறிப்பிட்டு) என்பதும் குறிப்பிடத்தக்கது” என்று பேசினார்.

கடந்த பத்தாண்டுகளில் இருந்ததைப் போல அல்லாமல் நாடாளுமன்றத்தின் இந்தத் தொடரில் பல முக்கிய மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும், கூட்டத்தொடரின் முதல் இரு தினங்கள் புதிய மக்களவை உறுப்பினர்கள் பதவி பிரமாணம் நடைபெறும். இதனை தொடர்ந்து, மக்களவைக்கு புதிய சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற உள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஒருவரை இந்த பதவிக்கு முன்மொழிய கூட்டணிக் கட்சிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. ஆனால் பாரதிய ஜனதா கட்சி, சபாநாயகர் பதவிக்கான தனது வேட்பாளர் யார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.

அதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு இதுவரை யார் பெயரையும் காங்கிரஸ் தலைமை இன்னும் அறிவிக்கவில்லை. ராகுல் காந்தி அந்த பொறுப்பை ஏற்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.