நாடாளுமன்ற கூட்டத்தொடர் pt web
இந்தியா

நாளை கூடுகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர்: எதிர்க்கட்சிகள் எழுப்ப இருக்கும் முக்கிய பிரச்னைகள் இவைதான்!

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நாளைதொடங்க உள்ள நிலையில், நீட் நுழைவுத் தேர்வு குளறுபடிகள், அக்னிவீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப, INDIA கூட்டணிக்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

PT WEB

பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின் முதன்முறையாக நாடாளுமன்றம் நாளை (ஜூன் 24 ஆம் தேதி) கூடுகிறது. கடந்த பத்தாண்டுகளில் இருந்ததைப் போல அல்லாமல் இந்தத் தொடரில் பல முக்கிய மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தொடரின் முதல் இரு தினங்கள் புதிய மக்களவை உறுப்பினர்கள் பதவி பிரமாணம் நடைபெற உள்ளது.

அதன் பிறகு மக்களவைக்கு புதிய சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஒருவரை இந்த பதவிக்கு முன்மொழிவு கூட்டணிக் கட்சிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. ஆனால் பாரதிய ஜனதா கட்சி, சபாநாயகர் பதவிக்கான தனது வேட்பாளர் யார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.

நாடாளுமன்றம்

அதேபோல் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு இதுவரை யார் பெயரையும் காங்கிரஸ் தலைமை இன்னும் அறிவிக்கவில்லை. ராகுல் காந்தி அந்த பொறுப்பை ஏற்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் விரும்புகின்றனர். அவர் அந்த பொறுப்பை ஏற்காவிட்டால், மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு அந்தப் பதவியை அளிக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் தலைவர்கள் பேசி வருகின்றனர்.

வரும் 27 ஆம்தேதி மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டு அமர்வில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ உரை நிகழ்த்த உள்ளார். பின்னர் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஜூலை மாதத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து அதற்கான ஒப்புதல் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்துக்குள் பெற வேண்டும் என நரேந்திர மோடி அரசு திட்டமிட்டுள்ளது.

ராகுல் காந்தி

இந்தக்கூட்டத்தொடரில், நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கீடு நடத்த வேண்டும் என வலியுறுத்தவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக "INDIA" கூட்டணி கட்சிகளின் மக்களவை மற்றும் மாநிலங்களவை குழு தலைவர்களின் ஆலோசனை நடைபெறும் எனவும் ஒருங்கிணைப்புடன் செயல்பட திட்டமிட்டுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

குளறுபடிகள் காரணமாக 2024 ஆம் வருட நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்த பல்வேறு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அக்னிவீர் திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் பாதுகாப்பு படைகளுக்கு முன்பு இருந்ததைப் போலவே வீரர்கள் சேர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் மற்றும் ஒத்திவைப்பு தீர்மானம் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.