இந்தியா

சமூக வலைத்தளங்களுக்கு சில நெறிமுறைகள்: நாடாளுமன்றக் குழு உத்தரவு

சமூக வலைத்தளங்களுக்கு சில நெறிமுறைகள்: நாடாளுமன்றக் குழு உத்தரவு

webteam

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் சமூக வலைத்தளங்களுக்கு நாடாளுமன்றக் குழு பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளது.

செய்திகள், பிரச்சாரம், வியாபாரங்கள், விளம்பரங்கள் என எல்லாமும் கிடைக்கும் மிகப்பெரிய சந்தையாக சமூக வலைத்தளங்கள் உள்ளன. சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய கார்பரேட் நிறுவனங்கள் வரை , அதே போல் சிறிய மன்றங்கள் முதல் பெரிய தேசிய கட்சிகள் வரை சமூக வலைத்தளங்களை பெரிய சக்தியாக நினைக்கின்றன. தேர்தல் பிரச்சார வகைகளில் சமூக வலைத்தளங்கள் மூலம் பிரச்சாரம் என்பதும் சேர்ந்துவிட்டது. சமூக வலைத்தளங்களுக்கென தனி பிரிவு உருவாக்கப்பட்டு பல கட்சிகள் தங்களது பிரச்சாரங்களை தொடங்கிவிட்டன.  

இந்நிலையில் தேர்தல் நேரங்களில் சமூக வலைத்தளம் கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகள் தொடர்பாக டெல்லியில் நேற்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேஸ்புக் சார்பாக, அந்நிறுவனத்தின் உலகளாவிய கொள்கை முடிவு துறையின் தலைவர் ஜோயல் கப்லான் கலந்து கொண்டார். பேஸ்புக் மூலம் பரப்பப்பட்ட ஆதாரமற்ற தகவல்கள் குறித்தும் காஷ்மீர் புல்வாமா தாக்குதல் தொடர்பான சர்ச்சை கருத்துகள் தொடர்பாகவும் ஜோயல் கப்லான் தனது வருத்தத்தை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. 

மேலும் போலி செய்திகள் பரவுவதை தடுக்கவும், தேர்தல் காலம் என்பதால் போலி கணக்குகளை நீக்கி பதிவுகளின் தரத்தை ஆராய்வது குறித்தும் பேஸ்புக் தனது நிலைப்பாட்டை தெரிவித்ததாக தெரிகிறது. இது குறித்து சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ள நாடாளுமன்றக் குழு, மத்திய அமைச்சகங்கள் மற்றும் தலைமை தேர்தல் ஆணையத்திடம் ஆலோசித்து சில வழிகாட்டி நெறிமுறைகள் வழங்கப்படும் என்றும் சமூக வலைத்தள நிறுவனங்கள் அதனை பின்பற்றி நடந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.