செய்தியாளர்: கணபதி சுப்ரமணியம்
தொடர்ந்து நடைபெற்று வந்த மோதலுக்கிடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஒரு நாள் முன்னதாகவே நிறைவடைந்துள்ளது. மக்களவையில் மேலும் மூன்று உறுப்பினர்கள் வியாழக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்தக் கூட்டத் தொடரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள எதிர்க் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை சதம் அடித்துள்ளது. மாநிலங்களவையும் சேர்த்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 146 உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், மூன்று முக்கிய குற்றவியல் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா, மற்றும் பாரதிய சாட்சிய மசோதாக்கள் எதிர்ப்பே இல்லாமல் நிறைவேறின. பாரதிய ஜனதா கட்சி, ஒய் எஸ் ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் மற்றும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணியில் இல்லாத கட்சிகள் மட்டுமே விவாதத்தில் பங்கேற்ற நிலையில், இந்த மூன்று முக்கிய மசோதாக்களும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற்றுள்ளன. இதே போலவே தொலை தொடர்பு துறைகளில் மாற்றம் செய்யும் டெலிகாம் மசோதாவும் மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் பெற்றது.
டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கிய இந்த கூட்டத்தொடரில் மக்களவையில் 18 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். அரசு தரப்பு 12 மசோதாக்களை தாக்கல் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார். குளிர்கால கூட்டத் தொடரில் நடைபெற்ற 14 அமர்வுகளில், மக்களவை 61 மணி நேரம் மற்றும் 50 நிமிடம் பல்வேறு அளவில் செயலிட்டது. தொடர்ச்சியாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், மக்களவை தனது வேலை நேரத்தில் 74% செயல்பட்டது என ஓம் பிர்லா தெரிவித்தார்.
மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்னே எப்போதும் இல்லாத அளவில் இடைநீக்கம் செய்யப்பட்டது தவிர, மாநிலங்களவை தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவரான ஜெகதீப் தன்கர் பரிகாசம் செய்யப்பட்ட விவகாரமும் பெரிய சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மூன்று குற்றவியல் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், நாடாளுமன்றம் ஒரு நாள் முன்னதாகவே குளிர்கால கூட்டத் தொடரை நிறைவு செய்துள்ளது. கூட்டத்தொடர் தொடர்பான அரசு அறிவிப்புபடி வெள்ளிக்கிழமை வரை மக்களவை மற்றும் மாநிலங்களவை அமர்வுகள் நடைபெறுவதாக இருந்தது.
மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா, மற்றும் பாரதிய சாட்சிய மசோதாக்கள் தற்போது நடைமுறையில் உள்ள IPC உள்ளிட்ட சட்டங்களுக்கு மாற்றாக விரைவில் அமல்படுத்தப்படும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலையும் பெற்ற நிலையில் இந்த மசோதாக்கள் அடுத்த கட்டமாக குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவர்களுடைய நலனுக்காக IPC உள்ளிட்ட சட்டங்கள் உருவாக்கப்பட்டது என உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் பேசினார். மாற்றாக தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்கள் இந்திய மக்களுக்கு நியாயம் அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன எனவும் தற்போது நடைமுறையில் உள்ள பல்வேறு குழப்பங்களை புதிய சட்டங்கள் தீர்த்து வைக்கும் எனவும் அமித் ஷா வலியுறுத்தினார்.
பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா, மற்றும் பாரதிய சாட்சிய மசோதாக்கள் மூலம் குற்றங்களுக்கு நியாயம் அளிக்கும் முறையில் பெரிய அளவில் சீர்திருத்தம் கொண்டு வரப்படுவதாக அமித் ஷா விளக்கினார். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மக்களுக்கு சுலபமாக நியாயம் அளிக்கும் வகையில் இந்த புதிய சட்டங்கள் அமைந்துள்ளன என அவர் வலியுறுத்தினார்.
குளிர்கால கூட்டத் தொடரில் மாநிலங்கள் அவையில் 17 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக ஜகதீப் தன்கர் தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவையின் வேலை நேரத்தில் 22 மணி நேரம் வீணானது என அவர் குறிப்பிட்டார். ஆகவே மொத்தமுள்ள வேலை நேரத்தில் 79% நேரம் மட்டுமே அலுவல்கள் நடைபெற்றன என மாநிலங்களை தலைவர் வருத்தம் தெரிவித்தார்.