நிர்மலா சீதாராமன் - பரகலா பிரபாகர் - மோடி புதிய தலைமுறை
இந்தியா

“மீண்டும் மோடி வந்தால் இந்திய வரைபடமே மாறும்” - நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் எச்சரிக்கை!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமனின் கணவர் பரகலா பிரபாகர், பிரதமர் மோடி மீது வைத்துள்ள விமர்சனம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

மக்களவை தேர்தலுக்கான பரப்புரை இந்தியா முழுவதும் பரபரப்பாக நடந்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் அரசியல் தலைவர்களின் பிரசார சத்தங்களே ஒலித்து வருகிறது. இந்த நேரத்தில், நிர்மலா சீதாரமனின் கணவரும் பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் முன்வைத்துள்ள விமர்சனமொன்று பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

யார் இந்த பரகலா பிரபாகர்?

கடந்த 10 ஆண்டுகளாகவே மோடி மற்றும் பாஜக அரசின் பொருளாதார செயல்பாடுகள் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைப்பவர் பரகலா பிரபாகர். இவர் லண்டனில் பொருளாதாரத்தில் PhD பெறவர். அரசியல் சார்ந்த பொருளாதார நிபுணர் மற்றும் கொள்கை ஆலோசகரான இவர், ‘இந்தியா எனும் கோணல் மரம்’ என்ற புத்தகத்தின் வாயிலாக மோடி அரசாங்கத்தின் பொருளாதார செயல்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.

நிர்மலா சீதாராமன் - பரகலா பிரபாகர் - மோடி

தற்போது முன்வைத்த விமர்சனம் என்ன?

மோடி அரசாங்கம் மீண்டும் தொடர்ந்தால் இந்தியாவில் மீண்டும் தேர்தலே நடக்காது” என பரகலா பிரபாகர் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் புனேவிலுள்ள கோகலே இன்ஸ்டிடியூட் ஆஃப் பாலிடிக்ஸ் அண்ட் எகனாமிக்ஸ் கல்லூரியில் ‘புதிய இந்தியாவின் அரசியல் பொருளாதாரம்’ என்ற தலைப்பின்கீழ் பேசியுள்ளார்.

அவர் பேசுகையில், “2024 ஆம் ஆண்டிற்கான மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்று அவரது அமைச்சரவையும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய வரைபடமே மாறும்.

நாடு முழுவதும் லடாக் - மணிப்பூர் போன்ற சூழ்நிலை உருவாகும். மீண்டும் மோடி அரசாங்கம் வெற்றி பெற்றால் இந்தியாவில் தேர்தலே நடக்காது.

’இனி பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்’ என்பது போன்ற வெறுப்பு பேச்சுக்கள் செங்கோட்டையில் இருந்து வெளிப்படையாகவே வரும்.

குக்கி - மெய்தி சமூகங்களுக்கு இடையிலான மோதல்களால் மணிப்பூரில் ஏற்பட்ட பிரச்னையும் அமைதியின்மையும் இந்தியா முழுவதும் நடைபெறும் வழக்கமான ஒன்றாக மாறிவிடும். வன்முறைகளால் ஏற்படும் அசாதாரண சூழல் நாட்டில் சாதாரண விஷயமாகவே மாறிவிடும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு முன்னதாக, ‘தேர்தல் பத்திரம் ஊழல் இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே மிகப்பெரிய ஊழல் ’ என்று அவர் குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.