இந்தியா

எச்சரிக்கை: பாராசிட்டமால் ஓவர்டோஸ் ஆனால் குழந்தைகளின் கல்லீரலையே காலி செய்துவிடுமாம்!

ச. முத்துகிருஷ்ணன்

அளவுக்கு அதிகமாக பாராசிட்டமால் மாத்திரையை உட்கொள்ளும் சிறுவர்களுக்கு கல்லீரல் இழப்பு ஏற்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னை, காஞ்சி காமகோடி சைல்டு டிரஸ்ட் மருத்துவமனையில் 2014 முதல் 2019-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்ட, ஒரு மாதம் முதல் 18 வயதுடைய 125 சிறுவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 10-ல் இருவர், அதிகளவில் பாரசிட்டமாலை உட்கொண்டதால் அவர்களுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

ஆய்வை நடத்திய டாக்டர் பூஜா அமர்த்தியா, “ஆரம்பத்தில் இந்த பாதிப்பை கண்டுபிடித்தால் வெகு சீக்கிரத்தில் குணப்படுத்திவிடலாம் என்பது தான் இதில் இருக்கும் ஒரே நல்ல விஷயம்” என்று சொல்கிறார். சொட்டுகள் கணக்கில் கொடுக்க வேண்டிய பாராசிட்டமால் மருந்தை, டீஸ்பூன் கணக்காய் ஊற்றுவதுதான் பேராபத்து என்று எச்சரிக்கிறார் பூஜா அமர்த்தியா.

பாராசிட்டமால் காரணமாக கல்லீரல் பாதிப்புக்கு ஆளான குழந்தைகளில்க் 90 சதவீதம் பேர் குணமடைந்து விட்டதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சிலருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ள்தாகவும் அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சில பெற்றோர்கள் காய்ச்சலை உடனடியாக நிறுத்த குழந்தைகளுக்கு அதிக அளவு பாராசிட்டமாலை கொடுக்கிறார்கள். 120 மில்லி கிராம் கொடுக்க வேண்டிய இடத்தில் ஒரு டீஸ்பூன் அதாவது 500 மில்லி கிராம் அளவுக்கு மருந்தை கொடுக்கிறார்கள். கல்லீரல் உடலின் வடிகட்டி. ஒரு குழந்தையின் கல்லீரல் அதிக நேரம் பாராசிட்டமாலை செயலாக்கினால் அது வேலை செய்வதை நிறுத்திவிடும்.” என்று மருத்துவர் பாலா ராமச்சந்திரன் தெரிவித்தார்.