டெல்லி-நாக்பூர் ரயிலில், பாரா அத்லெட் வீராங்கனை ஒருவருக்கு அப்பர் பெர்த் ஒதுக்கப்பட, வேறு வழியின்றி தரையில் அமர்ந்து பயணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர் சுர்ணவராஜ். 90 சதவீத மாற்றுத்திறனாளியான இவர், பல்வேறு தடகள போட்டிகளில் பதக்கம் வென்றவர். குடியரசுத் தலைவரிடம் விருது பெற்ற அவர், சமீபத்தில் டெல்லியிலிருந்து நாக்பூர் வரை ரயிலில் பயணித்தார். மாற்றுத் திறனாளியான அவருக்கு ரயிலில் அப்பர் பெர்த் ஒதுக்கப் பட்டிருந்ததுக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, அதை மாற்றித் தருமாறு டிக்கெட் பரிசோதகரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், மாற்றிக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், வேறு வழியின்றி தரையில் உறங்க வேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டது.
இந்த விவகாரம் குறித்து பேசிய சுர்ணவராஜ், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் புகார் தெரிவிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகள் ரயிலில் பிரச்னை இன்றி பயணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சுர்வணராஜ் ரயிலில் பயணித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.