இந்தியா

“கட்சியின் தேர்தல் செயல்பாடுகளுக்கு ஃபட்னாவிஸ்தான் பொறுப்பேற்க வேண்டும்” - பங்கஜா முண்டே

“கட்சியின் தேர்தல் செயல்பாடுகளுக்கு ஃபட்னாவிஸ்தான் பொறுப்பேற்க வேண்டும்” - பங்கஜா முண்டே

webteam

மகாராஷ்டிராவில் சில தலைவர்களுக்கு டிக்கெட் மறுக்கும் முடிவு மாநில அளவில் எடுக்கப்பட்டது எனவும் கட்சியின் தேர்தல் செயல்பாடுகளுக்கு தேவேந்திர ஃபட்னாவிஸ்தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் பாஜக தலைவர்களில் ஒருவரான பங்கஜா முண்டே தெரிவித்துள்ளார்.

முந்தையை தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் பங்கஜா முண்டே. பின்னர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அக்டோபர் 2019 சட்டமன்றத் தேர்தலில், அப்போதைய மாநில அமைச்சர்களான வினோத் தவ்தே மற்றும் சந்திரசேகர் பவன்குலே ஆகியோருக்கு டிக்கெட் மறுக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் பிரகாஷ் மேத்தா, ஏக்நாத் காட்ஸே ஆகியோருக்கும் டிக்கெட் கிடைக்கவில்லை.

இதையடுத்து முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கு டிக்கெட் மறுக்கும் முடிவு கட்சியின் மத்திய குழுவால் எடுக்கப்பட்டது என தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தொலைக்காட்சி ஒன்றிற்கு பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பங்கஜா முண்டே பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கு டிக்கெட் டெல்லியில் மறுக்கப்படவில்லை. அது மகாராஷ்டிரா மாநில அளவில் எடுக்கப்பட்ட முடிவு. கட்சி செயல்பாடுகள் எதுவாக இருந்தாலும் தேவேந்திர ஃபட்னாவிஸ் பொறுப்பேற்க வேண்டும். பாஜக ஆட்சியில் இருந்தது. ஆனால் அதையும் மீறி, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் தனஞ்சய் முண்டே அனைத்து விதமான ஆதரவையும் பெற்றார். அவருடைய பலமும் அதிகரித்தது” எனத் தெரிவித்தார். 

மேலும், "எனக்கு எதிராக இரண்டு வேட்பாளர்கள் இருந்திருந்தால், நான் தேர்தலில் தோற்றிருக்க மாட்டேன். அரசாங்கம் எங்களுடையதாக இருந்தாலும் தனஞ்சய் எனக்கு எதிராக அனைத்து ஆதரவையும் உதவியையும் பெற்றார்" என்று குற்றம்சாட்டினார்.