சபரிமலை கோவிலுக்குள் சடங்குகள் மீறப்பட்டால், கோவிலை மூடிவிடுமாறு தேவசம் போர்டினை பந்தளம் அரண்மனை கேட்டுக் கொண்டுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கவிதாவும், பெண்ணியவாதியான ரஹானா பாத்திமா என்பவரும் இன்று காலை சபரிமலைக்கு சென்றனர். இதில் ரஹானா இருமுடி அணிந்து ஐயப்ப பக்தராக சென்றார். பலத்த பாதுகாப்புடன் கவச உடைகள் அணிந்தபடி இருவரும் ஐயப்பன் கோயில் நோக்கிச்சென்றனர். இவர்கள், சபரிமலை சன்னிதானத்தின் நடைப்பந்தல் வரை பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர். ஆனால் அதற்கு மேல், இரு பெண்களையும் அனுமதிக்க மறுத்து ஐயப்ப பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்களின் எதிர்ப்பை தொடர்ந்து, சபரிமலை தந்திரியும் பெண்களுக்கு அனுமதி கிடையாது என திட்டவட்டமாக கூறினார். கேரள அரசும் இரண்டு பெண்களையும் திருப்பி அனுப்புமாறு உத்தரவிட்டது. சபரிமலை பக்திக்கான இடம், போராட்டக்காரர்களுக்கு அல்ல என்று கேரள அமைச்சர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, இரண்டு பெண்களும் திரும்பி செல்ல சம்மதித்தனர். போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் பம்பை நோக்கி அவர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர்.
இந்நிலையில், பந்தளம் அரண்மனை தரப்பில் இருந்து தேவசம் போர்டு அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. அதில், “சபரிமலை கோவிலில் சடங்குகள் ஏதேனும் மீறப்பட்டால், கோவிலை மூடிவிடுங்கள். தந்திரிகளின் ஒப்புதலுடன் மீண்டும் நடை திறக்கப்பட வேண்டும்” என கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து கேரள ஐ.ஜி.ஸ்ரீஜித் கூறுகையில், “பெண் பத்திரிக்கையாளர், பக்தரை சபரிமலை கோவில் வளாகம் வரை அழைத்துச் சென்றிருந்தோம். ஆனால், தந்திரி மற்றும் அச்சகர்கள் அவர்களுக்கு கோவிலை திறக்க மறுத்துவிட்டனர். சிறிது நேரம் நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம். அப்போது, பெண்களை உள்ளே நுழைய வைக்க முயன்றால் கோவிலை மூடிவிடுவோம் என தந்திரி கூறினார்.
நாங்கள் உதவி செய்ய முடியாத நிலையில் இருந்தோம். கோவிலை மூடினால் அது மிகப்பெரிய சடங்கு பேரழிவாக ஆகிவிடும் என்றார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எங்களால் அப்புறப்படுத்தி இருக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்ய வேண்டாம் என கேரள அரசு கூறியுள்ளது. பக்தர்கள் தொடர்ந்து பாதுகாப்பு அளிப்போம்” என்றார்.
இதனிடையே, எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, ஆளுநர் சதாசிவத்தை சந்தித்துள்ளார். அப்போது சபரிமலை பகுதியில் நிலவி வரும் பதட்டமான சூழல் குறித்து தனது கவலையை தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சபரிமலைப் பகுதியில் சட்டம் ஒழுங்கை உறுதி செய்யுமாறு கேரள அரசினை ஆளுநர் சதாசிவம் கேட்டுக் கொண்டுள்ளார்.
பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் உட்பட இரண்டு பெண்கள் சபரிமலை கோவில் வளாகம் வரை சென்று திரும்பி கொண்டிருக்கும் நிலையில், 46 வயதுடைய பெண் ஒருவர் சபரிமலைக்கு செல்ல முயன்றுள்ளார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது மேரி ஸ்வீட்டி என்ற அந்த பெண் கூறுகையில், “அந்த பெண்கள் சென்றது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. பெண்கள் திரும்பி வருகிறார்கள் என்றால், அது உங்களது பின்னடைவு. நான் போக வேண்டும்” என தெரிவித்தார்.
இதனையடுத்து, அந்த பெண் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர், உயர் அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.