சீமா ஹைதர் twitter, ani
இந்தியா

'Karachi to Noida'-எல்லை தாண்டிய காதல் கதையில் நடிக்கும் பாக். பெண் சீமா ஹைதர்! எம்என்எஸ் எதிர்ப்பு

எல்லை தாண்டிய காதலில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் பெண் சீமா ஹைதருக்கு, மீண்டும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

Prakash J

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த சீமா ஹைதர்

நாட்டில் எத்தனையோ முக்கியச் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்க, மறுபுறம் எல்லை தாண்டிய காதல் கதைகளும் ஊடகங்களில் தவறாது இடம்பிடித்து வருகின்றன. அதில் ஒரு கதையாக, பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதர் என்ற பெண், தன்னுடைய 4 குழந்தைகளுடன் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து காதலர் சச்சினை மணந்து இங்கேயே வசித்து வருகிறார். சட்டவிரோதமாக சீமா ஹைதர் இந்தியாவுக்குள் நுழைந்ததையடுத்து காவல் துறையின் விசாரணை வளையத்தில் உள்ளார்.

'கராச்சி டு நொய்டா' படப்பிடிப்பில் கலந்துகொண்ட சீமா ஹைதர்

இந்த நிலையில், சமீபத்தில் சீமா ஹைதர், 'கராச்சி டு நொய்டா' என்ற படத்திற்கான ஆடிஷனில் இடம்பெற்றிருந்த வீடியோ வைரலானது. அந்த படத்தில் இளைஞர் ஒருவருடன் அவர் செல்போனில் பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இப்படத்தை, நொய்டாவைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஒருவர் எடுப்பதாகச் சொல்லப்படுகிறது. இப்படப்பிடிப்பு காட்சிகளில்தான் சீமா ஹைதர் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து சீமா ஹைதருக்கு மீண்டும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இதையும் படிக்க: ஆக.15 வரை 'HouseFull': 3 நாட்களில் ரூ200 கோடி வசூலை கடந்த ’ஜெயிலர்’ - ’விக்ரம்’-ஐ ஓவர்டேக் செய்யுமா?

சீமாவின் நடிப்புக்கு நவநிர்மாண் சேனா கட்சி எதிர்ப்பு

சீமா ஹைதரின் படப்பிடிப்பு தொடர்பாக ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) கட்சியைச் சேர்ந்த தலைவர் அமேயா கோப்கர், ”பாகிஸ்தான் குடிமக்களுக்கு இந்திய திரையுலகில் இடமில்லை. இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதர், தற்போது இந்தியாவில் உள்ளார். அவர் ஒரு ஐஎஸ்ஐ ஏஜென்ட் என்றுகூட வதந்திகள் வந்தன. இந்திய திரைப்படத் துறையில் புகழுக்காக சிலர், சீமா ஹைதரை நடிகையாக மாற்ற முயற்சிக்கின்றனர். இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அப்படி இல்லாவிட்டால், நாங்கள் உறுதியான நடவடிக்கை எடுப்போம்” என ட்வீட் செய்துள்ளார்.

படத்தின் தயாரிப்பாளர் சொல்வது என்ன?

இதுகுறித்து அப்படத்தின் தயாரிப்பாளர், “ஆன்லைன் விளையாட்டின்போது இவர்களுடைய காதல் கதை எப்படி உருவானது என்பதையும், சீமா இந்தியாவுக்குள் நுழைந்தது எப்படி என்பதையும் உலகுக்குச் சொல்ல விரும்புகிறோம். அந்த நிகழ்வுகளை எங்கள் படத்தில் தெரிவிக்க விரும்புகிறோம். அதனால், சீமா ஹைதர் பற்றிய அனைத்து விவரங்களையும் சேகரிக்கிறோம். இதற்காக அவருடைய முதல் கணவரையும் இங்கே வரவழைத்து தகவல்கள் கேட்க இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய இளைஞருடன் காதல் மலர்ந்தது எப்படி?

பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதர் என்ற இளம்பெண், உத்தரப் பிரதேச இளைஞரான சச்சினுடன் ஆன்லைன் விளையாட்டின்போது பழக்கம் ஏற்பட்டு, அவர் மீது காதலில் விழுந்தார். பின்னர் காதலனைத் தேடி, தன் குழந்தைகளுடன் நாடுவிட்டு இந்தியா வந்தடைந்தார். இந்தியாவில் சட்டவிரோதமாக நுழைந்து காதலர் சச்சினுடன் வசித்துவந்த சீமா மற்றும் அவரது 4 குழந்தைகளையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, "நான் சச்சினை காதலிக்கிறேன். எனக்கு பாகிஸ்தான் செல்ல விருப்பமில்லை. சவுதியில் இருக்கும் என் கணவருடன் இணைந்து வாழ விருப்பமுமில்லை. இந்தியாவிலேயே தங்களைச் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும்" என்று சீமா தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

சச்சின், சீமா ஹைதர்

இதையடுத்து, அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது சீமா, சச்சினுடன் இணைந்து வாடகை வீட்டில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், இருவரும் காவல் துறையின் விசாரணை வளையத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நாங்குநேரி: பாதிக்கப்பட்ட மாணவர், பள்ளியில் அதிகாரிகள் நேரில் ஆய்வு!