பாகிஸ்தான் சுதந்திர தினமான இன்று, பஞ்சாப் மாநிலம் அட்டாரி - வாகா எல்லையில் வழக்கமாக இருநாட்டு வீரர்கள் இடையே நடைபெறக்கூடிய இனிப்பு பரிமாற்றம் இந்த முறை நடைபெறவில்லை.
இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டதற்கு ஒருநாள் முன்னதாக பாகிஸ்தானுக்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திரம் வழங்கப்பட்டது. இன்று பாகிஸ்தான் சுதந்திர தினம் என்ற நிலையில், வழக்கமாக அட்டாரி -வாகா எல்லையில் பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீரர்கள் இனிப்பு வழங்கி வாழ்த்து கூறுவர். அதேபோல, நாளைய சுதந்திர தினத்துக்கு இந்திய வீரர்களுக்கு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இனிப்பு வழங்குவார்கள்.
ஆனால், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து, மாநில அந்தஸ்து நீக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக்கப்பட்டது ஆகிய காரணங்களால் பாகிஸ்தானுடன் உறவில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், எல்லையில் இனிப்பு பரிமாற்ற நிகழ்வு நடைபெறாது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோன்று பக்ரீத் தினத்தன்றும் காஷ்மீர் எல்லையில் வழக்கமாக இனிப்பு பரிமாறிக்கொள்ளப்படும் நிகழ்வு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.