காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) தலைவர் மெகபூபா முஃப்தி கூறியதற்கு சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவர் இப்படி பேசுவதற்கு அதிகாரம் கொடுத்ததே பாஜகதான் எனவும் அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
பிடிபி கட்சித் தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முஃப்தி நேற்று முன்தினம் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது அவர், "சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளாகியும் காஷ்மீரில் முழு அமைதி திரும்பவில்லை. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுடன் நடந்து வரும் சர்ச்சையே இதற்கு காரணம். எனவே, பாகிஸ்தானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை இந்தியா நடத்த வேண்டும்" என அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், மெகபூபா முஃப்தியின் பேச்சுக்கு சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியதாவது:
மெகபூபா முஃப்தி ஒரு பாகிஸ்தான் ஆதரவாளர் மற்றும் தீவிரவாதிகளின் அனுதாபி என்பது அனைவருக்கும் தெரியும். காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த என்ன இருக்கிறது? காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி எனும்போது, பாகிஸ்தானுடன் எதற்காக நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்?
பாகிஸ்தானுக்கு ஆதரவாக மெபூபா முஃப்தி பேசுவதற்கு முக்கிய காரணம் பாஜக தான். காஷ்மீரில் மெகபூபா ஆட்சியமைப்பதற்கு பாஜக ஆதரவு தந்தது. அஃப்சல் குரு, புர்ஹான் வானி போன்ற தீவிரவாதிகளுக்கு வெளிப்படையாக அவர் ஆதரவு தெரிவித்தபோதிலும், மெகபூபாவுடன் பாஜக கூட்டணி அமைத்தது. இதுதான், பாகிஸ்தானுக்கு ஆதரவாக அவரை இப்போது பேச வைத்துள்ளது. அவரது பேச்சுக்கு பாஜகவே பொறுப்பேற்க வேண்டும் என சஞ்சய் ராவத் கூறினார்.
முன்னதாக, காஷ்மீரில் 2015-ம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்து மெகபூபா முஃப்தியின் பிடிபி கட்சி ஆட்சியமைத்தது. பின்னர், இந்தக் கூட்டணி 2018-இல் உடைந்தது குறிப்பிடத்தக்கது.