இந்தியா

குடியரசுத் தலைவர் செல்லும் விமானத்திற்கு பாகிஸ்தான் அனுமதி மறுப்பு

குடியரசுத் தலைவர் செல்லும் விமானத்திற்கு பாகிஸ்தான் அனுமதி மறுப்பு

webteam

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செல்லும் விமானம் தங்கள் நாட்டு வான்வெளியில் பறப்பதற்கு பாகிஸ்தான் அனுமதி மறுத்துள்ளது. 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அரசு முறை பயணமாக வரும் திங்கட்கிழமை ஐஸ்லாந்து, சுவட்சர்லாந்து மற்றும் ஸ்லோவேனியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல உள்ளார். இந்தச் சுற்றுப்பயணத்திற்கு குடியரசுத் தலைவர் செல்லும் விமானம் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க பாகிஸ்தான் அரசிடம் அனுமதி கோரப்பட்டது.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் செல்லும் விமானம் பாகிஸ்தான் வான்வெளியில் செல்ல அந்நாட்டு அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்த முடிவை பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். தற்போது காஷ்மீரில் நிலவும் பதட்டமான சூழல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி இந்திய விமானப்படை பாலகோட் தாக்குதல் நடத்திய பிறகு பாகிஸ்தான் வான்வெளியில் விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. எனினும் கடந்த மார்ச் மாதம் ஒரு சில விமானங்கள் பறக்க பாகிஸ்தான் அனுமதி அளித்தது. ஆனால் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க தடை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.