இந்தியா

சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி.. மீண்டும் திறக்கப்படவுள்ள பத்மநாபபுரம் அரண்மனை..!

சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி.. மீண்டும் திறக்கப்படவுள்ள பத்மநாபபுரம் அரண்மனை..!

kaleelrahman

கடந்த 7 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனை வரும் மூன்றாம் தேதி திறக்கப்பட உள்ளது.


கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கையாக கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து சுற்றுலா தலங்களும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டது. அதையொட்டி, கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையும் கடந்த மார்ச் 13ஆம் தேதி மூடப்பட்டது. கடந்த ஏழு மாதங்களாக அரண்மனை மூடப்பட்டு இருப்பதால் பத்மநாபபுரம் பகுதியே வெறிச்சோடி காணப்படுகிறது.


இந்நிலையில், கொரோனா அச்சம் குறைந்து ஊரடங்கில் பல தளர்வுகளை அரசு அறிவித்துள்ள நிலையில் சுற்றுலா தலங்களுக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பத்மநாபபுரம் அரண்மனை திறக்கும் நாளை எதிர்நோக்கி பொதுமக்கள் காத்திருந்தனர்.


இதைத் தொடர்ந்து வரும் 3ஆம் தேதி முதல் பத்மநாபபுரம் அரண்மனை திறந்து செயல்படும் எனவும் சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தொற்று தடுப்பு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அரண்மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கொரோனா அச்சத்தில் இருந்து பொதுமக்கள் கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் சூழலில், பத்மநாபபுரம் அரண்மனை திறக்கப்பட உள்ள தகவலால் அப்பகுதி வியாபாரிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.