கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி திருக்கோயிலை நிர்வகிக்க மன்னர் குடும்பத்திற்கு உரிமை உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயில் நிர்வாகத்தினை கேரள அரசின் கீழ் இயங்கும் தேவசம் போர்டு மேற்கொள்வதா? அல்லது மன்னர் குடும்பத்தினர் நிர்வகிப்பதா? என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பத்மநாப சுவாமி கோயிலை நிர்வகிக்க மன்னர் குடும்பத்திற்கு உரிமைகள் உள்ளது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
மன்னர் இறந்துவிட்டால் அவரது வாரிசுகளுக்கு இந்த கோயிலில் உரிமை இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என விளக்கமளித்த நீதிபதிகள், இடைக்கால நடவடிக்கையாக கோயிலின் நிர்வாகப் பணிகளை மேற்பார்வையிட திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கவும் நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. ஆனால், அக்குழுவில் இடம்பெறும் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கோயிலில் ஏற்கனவே ஐந்து கருவூலங்கள் திறக்கப்பட்ட நிலையில், ஆறாவது கருவூலத்தை திறக்க வேண்டும் என்பதனை புதிதாக நியமிக்கப்பட்ட குழு சம்பந்தப்பட்ட முடிவை எடுக்கும் எனக் கூறிய நீதிபதிகள், கோயிலின் நிர்வாகமும், அதன் சொத்துக்களும் கேரள அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என கடந்த 2011 ஆம் ஆண்டு கேரள உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தனர்.