கடந்த 16-ம் தேதி தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ராஜஸ்தானில் இருந்துச் சென்ற லாரி உத்தரப் பிரதேசத்தின் ஆரையா பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். மேலும் காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இறந்தவர்களில் 11 பேர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நேர்ந்த இந்த விபத்து நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் உத்தரப்பிரதேச அரசு உயிரிழந்தவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கண்டனம் தெரிவித்துள்ளார். விபத்தில் பலியானவர்களின் உடல்களை திறந்த லாரியில் கருப்பு தார்பாய் மூலம் மூடி அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதே லாரியில் காயமடைந்தவர்களையும் அனுப்பியதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து தெரிவித்த ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மனிதத்தன்மையில்லாத இந்த செயலை உத்தரப்பிரதேச அரசு தவிர்த்திருக்க வேண்டும். மாநில எல்லை வரை உரிய மரியாதையுடன் அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன் என தெரிவித்தார். இதனை அடுத்து லாரியில் இருந்து உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஜார்க்கண்ட் கொண்டு செல்லப்பட்டது.