சாதி அரசியல் குறித்து பேசிய மோடிக்கு பிரியங்கா காந்தியும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் பதிலடி கொடுத்துள்ளனர்.
உத்தப் பிரதேசத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு நான் எந்த சாதி என்பது இதுவரை தெரியாமல் இருந்தது. ஆனால் மாயாவதி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருந்து வந்ததை குறிப்பிட்டு பேசியுள்ளனர். ஆமாம், நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் தான் பிறந்தேன். எதிர்க்கட்சிகளிடம் நான் கைகூப்பி வேண்டி கேட்டுக் கொள்கிறேன். அரசியலில் சாதியை கலக்க வேண்டாம். நாட்டில் உள்ள 130 கோடி மக்களும் என் குடும்பம் தான் என்றார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் சாதியை பற்றி பிரசாரம் செய்து பிரதமாரக வந்த முதல் நபர் மோடிதான். இப்போது தனக்கு சாதியில்லை என்று பேசுகிறார். கடந்த 2014 ஆண்டிலும் அதன்பின்பும் தேநீர் விற்பவரை பிரதமராக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்று மோடி பேசி வந்தார். எங்களை ஞாபக மறதியுள்ள முட்டாள்கள் என்று மோடி நினைத்து விட்டாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்து பேசிய பிரியங்கா காந்தி, “இன்றும் எனக்கு பிரதமர் மோடியின் சாதி என்னவென்று தெரியாது. எதிர்க்கட்சிகள், காங்கிரஸ் தலைவர்கள் வளர்ச்சி விவகாரத்தை மட்டும்தான் பேசுகிறார்கள். நாங்கள் யாருக்கு எதிராகவும் தனிப்பட்ட தாக்குதலையும் முன்வைக்கவில்லை,” என்றார்.