இந்தியா

“ரெப்போ விகிதம் குறித்த ஆர்பிஐ-யின் முடிவை வரவேற்கிறேன். ஆனால்...” - ப.சிதம்பரம் ட்வீட்

“ரெப்போ விகிதம் குறித்த ஆர்பிஐ-யின் முடிவை வரவேற்கிறேன். ஆனால்...” - ப.சிதம்பரம் ட்வீட்

webteam

ரெப்போ விகிதம் குறித்த ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை வரவேற்கிறேன் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியா பாதிப்பிற்குள்ளாகியுள்ள நிலையில், அனைத்து வகையான வரிகளைச் செலுத்துவதற்கான அவகாசத்தை அரசு ஜூன் 30 வரை நீட்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஏற்கெனவே வைத்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ், “ரெப்போ விகிதம் 5.15 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்படுகிறது. ரிவர்ஸ் ரெப்போ 4.9சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

எல்லா வகையான கடன்களின் தவணைகளுக்கு 3 மாதங்களுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வங்கிகளில் கடன் பெற்றோர் 3 மாதங்களுக்கு இ.எம்.ஐ கட்ட தேவையில்லை. மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதஙகள் இ.எம்.ஐ கட்டத் தேவையில்லை. அது ஒத்திவைக்கப்படுகிறது. அதேசமயம் கடன் வழங்குவதை எக்காரணத்தை கொண்டும் வங்கிகள் குறைத்து விடக்கூடாது.” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இதுகுறித்து ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “ரெப்போ வீதத்தைக் குறைப்பதற்கான ரிசர்வ் வங்கியின் முடிவையும், அதிக பணப்புழக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் நான் வரவேற்கிறேன். எனினும் இ.எம்.ஐ தேதிகளை ஒத்திவைப்பது குறித்த ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு தெளிவற்ற நிலையில் உள்ளது. அனைத்து இ.எம்.ஐ.களையும் செலுத்த வேண்டிய தேதிகளும் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்பதே கோரிக்கை.
” எனத் தெரிவித்துள்ளார்.