இந்தியா

“குறைந்தபட்ச வருவாய் திட்டத்தால் 25 கோடி பேருக்கு பலன்” - ப.சிதம்பரம்

“குறைந்தபட்ச வருவாய் திட்டத்தால் 25 கோடி பேருக்கு பலன்” - ப.சிதம்பரம்

webteam

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அறிவித்த குறைந்தபட்ச வருவாய் திட்டம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.

ஏழை குடும்பங்களுக்கு ரூ. 72 ஆயிரம் அளிக்கும் திட்டத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தமது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளார். ஆனால் இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு மேலும் கடன் சுமை கூடும் என பல்வேறு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று சென்னை சத்தியமூர்த்திபவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ராகுல்காந்தி ஒரு புரட்சிகரமான திட்டத்தை அறிவித்திருக்கிறார். இந்தத் திட்டத்தின் நோக்கம் மகாத்மா காந்தியின் கனவை நினைவாக்குவது. 

இந்தியாவில் இன்னும் ஏழ்மை இருக்கிறது. அந்தக் குடும்பங்களை குறிவைத்து இந்தத் திட்டத்தை தயாரித்திருக்கிறோம். இந்தியாவில் 5 கோடி குடும்பங்களுக்கு இத்திட்டத்தினால் பயன் கிடைக்கும். ஒரு குடும்பத்திலே 5 உறுப்பினர்கள் என்று வைத்து கொண்டால் 25 கோடி பேருக்கு இத்திட்டத்தினால் பலன் கிடைக்கும். இந்தப் புதிய திட்டம் நாடு முழுவதும் படிப்படியாக செயல்படுத்தப்படும். இதை செயல்படுத்த வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்படும். திட்டத்தின் ஒவ்வொரு கட்டத்தின்போதும் வல்லுநர் குழுவின் ஆலோசனைகள் பெறப்படும். முறைகேடுகள் நடைபெறாமல் ஏழைகள் அடையாளம் காணப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.