இந்தியா

சட்டத்திற்கு மேல் யாருமில்லை என்பது மீண்டும் நிரூபணம் - ரூபா ஐபிஎஸ்

சட்டத்திற்கு மேல் யாருமில்லை என்பது மீண்டும் நிரூபணம் - ரூபா ஐபிஎஸ்

rajakannan

சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம் என்பது மீண்டுமொருமுறை நிரூபணம் ஆகியுள்ளதாக ஐபிஎஸ் அதிகாரி ரூபா கூறியுள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சுவர் ஏறி குதித்து  சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ஒருவர், இந்தியாவில் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை. டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அதாவது தன்னால் திறக்கப்பட்ட சிபிஐ அலுவலகத்திலே அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சட்டத்திற்கு மேல் யாரும் பெரிதில்லை என்பது மீண்டுமொருமுறை நிரூபணம் ஆகியுள்ளதாக ஐபிஎஸ் அதிகாரி ரூபா தன்னுடைய ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். ப.சிதம்பரம் கைதை சுட்டிக்காட்டியே அவர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து, ரூபாவின் இந்த கருத்துக்கு ட்விட்டரில் பலரும் விமர்சனங்களை முன் வைத்தனர்.

அதனையடுத்து, ரூபா மற்றொரு ட்விட்டர் பதிவில், “என்னுடைய கருத்துக்கு வேறு அர்த்தங்களை சேர்க்க நினைக்கின்றனர். அப்புறம் என்ன?.. அவர்களை பற்றி கூறுங்கள் என பல்வேறு கேள்விகளை முன் வைக்கிறார்கள். ஒரு காவல்துறை அதிகாரியாகவும், குடிமகளாகவும் அனைத்து குற்றவாளிகளும் விசாரிக்கப்பட வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு. இதுவும் ஒரு முன்மாதிரி நிகழ்வு என்றாலும் கூட, குற்றவியல் சட்ட அமைப்பு எல்லோருக்கும் சமமானதாக இருக்கு போது, நான் இன்னும் அதிக நம்பிக்கையுடன் இருப்பேன்” என்று கூறியிருந்தார்.