உத்தரபிரதேசத்தில் அகில இந்திய மஜ்லீஸ் முஸ்லிமின் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி சென்ற கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அகில இந்திய மஜ்லீஸ் முஸ்லிமின் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சி போட்டியிடுவதால் முஸ்லிம் மக்களின் வாக்குகள் கணிசமாக பிரிந்து பாஜகவுக்கு சாதகமாகி விடும் என காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மேலும், பாஜகவுக்கு மறைமுகமாக உதவி செய்வதற்காகவே முஸ்லிமின் கட்சி உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் போட்டியிடுவதாகவும், அக்கட்சி பாஜகவின் 'பீ' டீம் எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இதனால் முஸ்லிமின் கட்சித் தலைவர் அசாசுதீன் ஒவைசிக்கு பல்வேறு அரசியல் கட்சிகளில் கடும் எதிர்ப்பு காணப்படுகிறது. இருப்பினும் பல மாநிலங்களில் தேர்தலில் போட்டியிட்டு அவரது கட்சி சில தொகுதிகளை வென்றும் இருக்கிறது.
இந்த சூழலில், உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள கிதோர் பகுதியில் தனது கட்சி வேட்பாளருக்கு அசாதுதீன் ஒவைசி இன்று மதியம் வாக்கு சேகரித்து பரப்புரையில் ஈடுபட்டார். அதன் பிறகு, மாலையில் தனது காரில் அவர் டெல்லிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். டெல்லி அருகே சஜ்ஜார்சி சுங்கச்சாவடியை நெருங்கிய போது, அங்கிருந்த மர்ம நபர்கள் ஒவைசியின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் அவரது காரை 5-க்கும் மேற்பட்ட துப்பாக்கிக் குண்டுகள் துளைத்தன. எனினும், இந்த சம்பவத்தில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுகுறித்து ஒவைசி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "எனது கார் மீது 3 முதல் 4 பேர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். 4 ரவுண்டுகள் சுடப்பட்டன. பிறகு அவர்கள் மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பிச் சென்றனர். துப்பாக்கியால் சுட்டதில் எனது கார் டயர்கள் பஞ்சராகின. எனவே மற்றொரு காரில் ஏறி நான் டெல்லி திரும்பினேன். நல்வாய்ப்பாக நாங்கள் அனைவரும் உயிர் பிழைத்தோம். அல்லாவுக்கு நன்றி" எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து உத்தரபிரதேச போலீஸார் வழக்கு பதிவு செய்து, துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.