இந்தியா

"என்னை பணத்தால் யாரும் வாங்க முடியாது!" - மம்தா குற்றச்சாட்டுக்கு ஓவைசி பதிலடி

Sinekadhara

"இன்றைய நாள் வரை என்னை பணத்தால் யாரும் வாங்க முடியவில்லை. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அடுக்காமல் சொந்த மாநிலத்தைப் பற்றி கவலைப்படுங்கள்" என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் ஓவைசி பதிலடி தந்தார்.

கொல்கத்தாவின் ஜல்பைகுரியில் நடந்த பேரணி ஒன்றில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "பாஜக, என்னைப் பயமுறுத்த முயற்சிக்கும்போது நான் அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். முடிந்தால் எனது ஆட்சியைக் கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி பாருங்கள். என்ன நடக்கிறது என நான் பார்க்கிறேன். அப்படி நடந்தால் எனக்கு அது நல்ல விஷயம்தான். எனது பணிச்சுமை குறையும், நான் பேரணிகளையும் கூட்டங்களையும் நடத்தி உங்கள் எல்லா வாக்குகளையும் என்னால் கவர முடியும்" என்று சவால் விடுத்தார்.

தொடர்ந்து பேசியவர், "நாடாளுமன்றத் தேர்தலில், டி.எம்.சி வடக்கு பெங்காலிலிருந்து ஒரு இடத்தையும் வெல்லவில்லை. நாங்கள் என்ன குற்றம் செய்தோம்? நாங்கள் என்ன அநீதி செய்தோம்? அனைத்து இடங்களையும் பாஜக வென்றது? மக்களவைத் தேர்தலில் எனக்கு எந்த இடமும் கிடைக்காமல் போகலாம், ஆனால் சட்டமன்றத் தேர்தலில் மக்களின் எல்லா ஆசீர்வாதங்களையும் விரும்புகிறேன்" என்றவர், "பாஜகவுக்கு உதவ இங்கே ஒரு கட்சி உள்ளது. சிறுபான்மை வாக்குகளைப் பிரிக்க ஹைதராபாத்தில் இருந்து ஒரு கட்சியைப் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். பாஜக அவர்களுக்கு பணம் தருகிறது, அவர்கள் வாக்குகளைப் பிரிக்கிறார்கள். பீகார் தேர்தல் அதை நிரூபித்துள்ளது" என்று ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் மீது விமர்சித்தார்.

இந்த விமர்சனத்துக்கு இன்று பதிலடி கொடுத்து ஓவைசி அளித்த பேட்டியில், "இன்றைய நாள் வரை அசாதுதீன் ஓவைசியை பணத்தால் யாரும் வாங்க முடியவில்லை. மம்தாவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. மம்தா தனது சொந்த மாநிலத்தை பற்றி கவலைப்பட வேண்டும். அவரது மக்கள் பலர் பாஜகவுக்கு செல்கிறார்கள். மம்தா தனது பேச்சால் பீகார் வாக்காளர்களையும் எங்களுக்கு வாக்களித்த மக்களையும் அவமதித்துள்ளார். முன்னதாக மம்தா பாஜகவைப் பாராட்டியுள்ளார், அவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஓர் அங்கமாக இருந்தார், எனவே இதுபோன்ற அபத்தமான அறிக்கைகளைத் தவிர்க்க வேண்டும்" என்று கூறினார்.

பாஜக தேசிய தலைவர் நட்டா வாகனம் சமீபத்தில் தாக்கப்பட்ட விவகாரத்தில் இருந்து மேற்குவங்க அரசியல் களம் அனல் பறந்து வருகிறது. சொற்போர், வன்முறை என காட்சிகள் அரங்கேறி வருகின்றன. இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்தப் போக்கு எவ்வளவு நாள் நீட்டிக்கும் எனத் தெரியவில்லை.