திரிபுரா  முகநூல்
இந்தியா

அதிர்ச்சியில் திரிபுரா | 15 வருடங்களில் HIV -யால் பாதிக்கப்பட்ட 800க்கும் மேற்பட்ட மாணவர்கள்...!

karthi Kg

இந்தியாவின் வடகிழக்கு மாநில மக்கள், நாள்தோறும் சொல்லில் அடங்கா துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். மணிப்பூர் கலவரம், அசாம் வெள்ளப்பெருக்கு, அருணாச்சல பிரதேசத்தில் சீனத்தின் அத்துமீறல் என நம் கண்களுக்கு தென்படும் வடகிழக்கு மாநில செய்திகள் எல்லாமே பெரும் சோகத்தை வர வைப்பதாக இருக்கின்றன. ஒரு சோகம் முடிவதற்குள் அடுத்த சோகம் என்பதாக, திரிபுராவில் இருந்து வந்திருக்கும் இந்த செய்தி நம்முள் ஈட்டியை இறக்கியிருக்கிறது.

Tripura State AIDS Control Society
Tripura State AIDS Control Society சமர்ப்பித்திருக்கும் அறிக்கையின்படி, மே 2024 வரை திரிபுரா மாநிலத்தில் 8,729 HIV பெருந்தொற்று இருப்பது கண்டறிப்பட்டிருக்கிறது. அதில் 828 பேர் மாணவர்கள் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை. அதிலும் 47 மாணவர்கள் இறந்துவிட்டார்கள் என்பது மாபெரும் துயரம்.

220 பள்ளிகள், 24 கல்லூரிகள் என மாநிலத்தில் இருக்கும் பல கல்வி மையங்களில் பயிலும் மாணவர்களிடம் இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. மாநிலத்திலிருக்கும் 164 சுகாதார மையங்களிலிருந்து இந்த தகவல்கள் சேகரிப்பட்டிருக்கின்றன.

"மாணவர்களிடையே இருக்கும் HIV தொற்றுக்கு போதைமருந்து பழக்கமே காரணமாக கண்டறியப்பட்டிருக்கிறது. ஊசி மூலம் போதை மருந்துகளை உடலுக்குள் செலுத்திக்கொள்ளும் பழக்கம் மாணவர்களிடையே பரவலானதே இதற்குக் காரணமாக சொல்லப்படுகிறது.

AIDS நோயால் பாதிக்கப்பட்டவர்களென 8,729 பேரை ART (Anti-retroviral Therapy) மையங்களில் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்களில் 5,674 பேர் உயிருடன் இருப்பவர்கள். 4,570 ஆண்கள், 1,103 பெண்கள், ஒரு திருநங்கை" என மூத்த அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், “செல்வந்தர்களின் வீட்டுப் பிள்ளைகளே பெரும்பாலும் இந்த நோய்க்கு ஆளாகியிருக்கிறார்கள். அரசுப் பணியில் உயர் பொறுப்பில் இருக்கும் பெற்றோர்கள், செல்வந்தர்கள் தங்கள் பிள்ளைகள் எது கேட்டாலும் பணத்தை கொடுத்திருக்கிறார்கள். அது இங்கு வந்து நின்றிருக்கிறது" என வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்.

அரசு சொன்ன விளக்கம் என்ன?

திரிபுரா அரசு

இந்நிலையில் இதற்கு திரிபுரா மாநில அரசு ஒரு விளக்கம் தந்துள்ளது. அதில், புள்ளிவிவரங்கள் எதையும் அரசு மறுத்ததாக தெரியவில்லை. ஆனால் இவை நடந்த காலகட்டம் என்பது, கடந்த 15 ஆண்டுகள் என குறிப்பிட்டுள்ளது. அதாவது ஏப்ரல் 2007 முதல் மே 2024 வரை அங்கு 828 மாணவர்கள் ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டு, பதிவு செய்து சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.