இந்தியா

50% பெண்களுக்கு ரத்தசோகை: ஆய்வில் தகவல்

50% பெண்களுக்கு ரத்தசோகை: ஆய்வில் தகவல்

webteam

நாட்டில் உள்ள பெண்களில் சரிபாதி பேர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 

சர்வதேச அளவிலான குளோபல் நியூட்ரிஷன் ரிப்போர்ட் 2017 எனும் ஆய்வு அறிக்கை இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. 140 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, இந்தியாவில் உள்ள பெண்களில் பாதிக்கும் அதிகமானோர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் என தெரிக்கிறது. பதின்பருவ பெண்களில் 22 சதவிகிதம் பேர் உடல்பருமனால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 38 சதவிகிதம் பேர் வயதுக்குரிய வளர்ச்சி இன்றி குள்ளமானவர்களாக இருப்பதாகவும் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இதற்கு போதிய ஊட்டச்சத்து இன்மையே காரணமாக கூறப்பட்டுள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தை‌களில் 21 சதவிகிதம் பேர் உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாமல் இருப்பதும் இந்த ஆய்வறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

பெண்களின் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு அவர்கள் ஆண்களுக்கு சமமாக நடத்தப்படாததும் ஒரு காரணம் என இந்த அறிக்கை தெரிவிக்கிறது. அனைத்து நாடுகளிலுமே உடல்பருமன் கொண்டவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால், நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.