டெல்லியில் ஏரோசிட்டி மற்றும் துக்லகாபாத் இடையேயான மெட்ரோ நடைபாதை அமைப்பதற்காக 4,766 மரங்களை வெட்டுவதற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருக்கிறது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு புதன்கிழமையன்று இத்திட்ட முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து மரங்களை வெட்டும் பணிகள் தொடங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்திய அதிகாரம் பெற்ற குழுவின் அறிக்கை (CEC), உச்சநீதிமன்றத்தில் மெட்ரோ நடைபாதை திட்டம் பொது நலன் கருதி அங்கீகரிக்கப்பட்டது என்று கூறியது.
மொத்தமுள்ள 6,961 மரங்களில் 4,766 வெட்டப்படும் என்றும், மீதமுள்ளவை நடவு செய்யப்படும் என்றும் இந்த குழு நீதிமன்றத்தில் அறிவித்தது. தெற்கு டெல்லியில் சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ரிட்ஜ் பகுதியில் சுமார் 1,072 மரங்கள் வெட்டப்படும் என்று உச்சநீதிமன்ற குழு தெரிவித்தது.
இந்த திட்டத்திற்காக காட்டு பகுதிகளில் 2,536 மரங்களும், காடுகள் இல்லாத பகுதிகளில் 3,353 மரங்களும் வெட்டப்படுகின்றன. ரிட்ஜ் பகுதியில் வெட்டப்படும் மரங்களின் இழப்பை ஈடுசெய்ய, இந்திய வனச் சட்டம் 1927-ன் கீழ் துவாரகாவில் உள்ள துசிராஸ் கிராமத்தில் 25 ஹெக்டேர் நிலப்பரப்பில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உருவாக்கப்படும் என்று அரசு தெரிவித்திருக்கிறது. இந்த பகுதியில் 34 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.