குடியரசு தின டிராக்டர் அணிவகுப்பில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காணாமல் போயுள்ளதாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மனித உரிமைகள் தன்னார்வ அமைப்பு ஒன்று கூறியுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை விவசாயிகள் தலைவர்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையே 12 முறை நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. இதனையடுத்து, ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் சில வன்முறைகள் நடந்தன, ஒரு விவசாயி உயிரிழந்தார்.
இதற்கிடையே, குடியரசு தின டிராக்டர் அணிவகுப்பில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காணாமல் போயுள்ளதாக பஞ்சாப் மனித உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது. ஜனவரி 26-ம் தேதி மோகாவின் டாடரிவால கிராமத்தைச் சேர்ந்த 12 விவசாயிகள் காணாமல் போயுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின அணிவகுப்புக்குப் பின்னர் காணாமல் போனதாகக் கூறப்படும் விவசாயிகள் பட்டியலை உழவர் சங்கங்கள் பெற்று வருவதாக, பாரதிய கிசான் யூனியன் (ராஜேவால்) தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் கூறியிருக்கிறார். இந்த விவகாரம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டையில் நடந்த வன்முறை தொடர்பாக இதுவரை 18 போராட்டக்காரர்களை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் மீது பாசிம் விஹார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 18 பேரில் ஏழு பேர் பஞ்சாபில் பதிந்தா மாவட்டத்தின் தல்வண்டி சபோ துணைப்பிரிவின் கீழ் உள்ள பாங்கி நிஹால் சிங் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
கைது செய்யப்பட்ட இந்த விவசாயிகள் ஜனவரி 23 அன்று, குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பில் பங்கேற்க இரண்டு டிராக்டர்களில் தங்கள் கிராமத்தை விட்டு வெளியேறி இருக்கின்றனர். வன்முறை தொடர்பாக டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்களுக்கு டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழு, கல்ரா மிஷன், பந்தி தல்மெல் சங்கதன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இலவச சட்ட உதவியை அறிவித்துள்ளன.
இதற்கிடையே, டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழுவின் தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா கூறுகையில், ``மோகாவைச் சேர்ந்த 11 போராட்டக்காரர்கள் நாங்லோய் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இப்போது திகார் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்" என்றார்.
அலிபூர் மற்றும் நரேலா பகுதிகளிலும் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளன. அவர்களில் பெரும்பாலோர் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் சட்டம், பண்டைய நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம் மற்றும் தொற்று நோய்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.