இந்தியா

படேல் சிலையை கடந்த 11 நாட்களில் 1.28 லட்சம் பேர் நேரில் கண்டுகளிப்பு

படேல் சிலையை கடந்த 11 நாட்களில் 1.28 லட்சம் பேர் நேரில் கண்டுகளிப்பு

Rasus

குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ஒற்றுமை சிலையை கடந்த 11 நாட்களில் மட்டும் மொத்தம் 1.28 லட்சம் பார்வையிட்டுள்ளனர்.

உலகின் மிக உயரமான சிலையாக சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலம் வதோதரா அருகே 182 மீட்டர் உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி அவரது சிலையை கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி பிரதமர் மோடி திறந்துவைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். ஒற்றுமை சிலை என இந்த சிலைக்கு பெயரிடப்பட்டுள்ளது. நவம்பர் 1-ஆம் தேதி முதல் சிலையை காண பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 11 நாட்களில் மட்டும் மொத்தமாக 1.28 லட்சம் பேர் படேல் சிலையை நேரில் கண்டுகளித்துள்ளனர். பொதுமக்கள் அனுமதிக்காக திறக்கப்பட்ட நவம்பர் 1-ஆம் தேதி மொத்தம் 10,000 பேர் சிலையை நேரில் கண்டுள்ள நிலையில் அதற்கு அடுத்தடுத்த நாட்களில் சிலையை காண சென்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாகவே இருந்திருக்கிறது. சனிக்கிழமை மட்டும் 24,000 பேர் சிலையை நேரில் கண்டுகளித்துள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை 27,000-க்கும் அதிகமானோர் சிலையை நேரில் கண்டுள்ளனர்.

இதனிடையே சிலையை காண எத்தனை பேர் வந்தாலும் அவர்களின் தேவைக்கேற்ப வசதியை செய்து கொடுக்க மாநில அரசு தயாராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குஜராத்தின் மொத்த வருவாயில் எப்போதும் சுற்றுலாத் துறை முக்கிய பங்காற்றுகிறது. இந்நிலையில் படேல் சிலையை காண வருகை புரிபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் அதன் மூலமும் குஜராத்தின் வருவாய் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.