Chased By Dog Twitter
இந்தியா

நாய் கடிக்கு பயந்து 3-வது மாடியில் இருந்து குதித்த டெலிவரி ஏஜென்ட்! அதிர்ச்சி சம்பவம்

நாய் துரத்தியதால் செய்வதறியாது தவித்த முகமது இலியாஸ் வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்துள்ளார்.

Justindurai S

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த முகமது இலியாஸ் (27) என்பவர், அமேசான் நிறுவனத்தில் டெலிவரி ஏஜென்டாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத் மணிகொண்டா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு பார்சலை விநியோகிக்க சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டில் இருந்த லாப்ரடோர் இன நாய் ஒன்று, முகமது இலியாஸை கடிக்க ஆக்ரோஷமாக ஓடி வந்துள்ளது.

Delivery boy | file image

நாய் துரத்தியதால் செய்வதறியாது தவித்த முகமது இலியாஸ் வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்துள்ளார். இதனால், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கீழே விழுந்ததில் உடலின் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டார் என்றும் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தை தொடர்ந்து ராயதுர்கம் போலீசார் இலியாஸிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். சம்பந்தப்பட்ட நாய் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் இதேபோன்று, உணவு டெலிவரி செய்வதற்காக சென்ற ஸ்விக்கி நிறுவன ஊழியரை வாடிக்கையாளரின் வளர்ப்பு நாய் துரத்தியதில் அவர் 3-வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் அரங்கேறி இருந்தது.

Dog

பெருநகரங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் நாய் வளர்ப்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும், அறிவுறுத்தலையும் அரசு வழங்கினாலும், அவை தொடர்ந்து காற்றில் பறக்க விடப்படுகின்றன என்பதற்கு இந்த சம்பவங்கள் உதாரணமாக அமைந்துள்ளன.