ராஜஸ்தானில் உள்ள தேசிய பூங்காவில் இருந்த75 புலிகளில் 25 புலிகள் காணவில்லை என தலைமை வனவிலங்கு காப்பாளர் பவன் குமார் அதிர்ச்சிகர அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அமைந்துள்ளது ரந்தம்பூர் தேசிய பூங்கா.. இந்த பூங்காவில் இருந்த 75 புலிகளில் மூன்றில் ஒரு பங்கு அதாவது 25 புலிகள் காணாமல் போய்விட்டதாக அதிர்ச்சிகர தகவலை தலைமை வனவிலங்கு காப்பாளர் பவன் குமார் தெரிவித்துள்ளார்.. இது அப்பகுதியில் இருக்கும் மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
காணாமல்போன புலிகள் வேட்டையாடப்பட்டதா?, தப்பித்து சென்றுவிட்டதா?, அல்லது நிர்வாகத்தின் அலட்சியமா? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், APCCF (வனவிலங்கு) ராஜேஷ் குமார் குப்தா மற்றும் வனத்துறை அதிகாரிகள் டாக்டர் டி மோகன் ராஜ் மற்றும் மனாஸ் சிங் ஆகியோர் உள்ளனர். இரண்டு மாதங்களில் இவர்கள் தங்கள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, ஒரு வருடத்தில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான புலிகள் காணாமல் போனதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவது இதுவே முதன் முறையாகும். இதற்கு முன் 2019 - 2022 வரை 13 புலிகள் காணமல் போயுள்ளன.
இந்நிலையில், கடந்த மே 17 முதல் செப்.30 வரை நான்கு மாத கால இடைவெளியில் காணாமல் போன புலிகளை கண்டறிவதே பூங்கா நிர்வாகத்தின் முதன்மை பணியாக இருக்கிறது.
இந்நிலையில், இது குறித்து தலைமை வனவிலங்கு காப்பாளர் பவன் குமார் உபாத்யாய் தெரிவிக்கையில், “ இது சம்பந்தமாக, ரந்தம்பூர் புலிகள் சரணாலயத்தின் கள இயக்குனருக்கும் பல கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் , திருப்திகரமான பதில்கள் எதுவும் வரவில்லை. ரந்தம்பூரில் 75 புலிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதில், புலிகள் T-58 மற்றும் T-86 - இவை இரண்டும் சமீபத்தில் இறந்துவிட்டன.
கடந்த அக். 14ஆம் தேதியிட்ட அறிக்கையின்படி, 11 புலிகள் பற்றிய உறுதியான தகவல்கள் ஓராண்டாக இல்லை. இதனால், புலிகள் காணாமல் போன விவகாரத்தை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் மூன்று வழிகளில் காணாமல்போன புலிகள் குறித்த ஆதாரங்களை சேகரிக்கிறோம்: ஒன்று பக்மார்க்குகள், இரண்டாவது நேரடி பார்வை மற்றும் மூன்றாவது கேமரா ட்ராப், கடைசி இரண்டும் மிகவும் நம்பகமானவை.
புலிகள் கண்களுக்கு எட்டாத தூரத்தில் இருக்கலாம் அல்லது அவை வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்திருக்கலாம். புலிகளில் சில Kuno வுக்கு செல்கின்றன. சில அங்கிருந்து இங்கு வருகின்றன. எந்தவொரு சாத்தியத்தையும் நாங்கள் நிராகரிக்கவில்லை. என்னகாரணம் என்று குழுவின் அறிக்கை தெளிவுப்படுத்தும், ” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், புலிகள் காணாமல் போய் இருப்பது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.