அக்டோபர் 1 முதல் கடுகு எண்ணெயுடன் மற்ற சமையல் எண்ணெய்கள் கலந்து தயாரிக்கும் அனுமதி தடை செய்யப்படும் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தற்போதுவரை கடுகு எண்ணெயில் 20 சதவீத மற்ற சமையல் எண்ணெயை கலக்க நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால், அக்டோபர் 1 முதல் புதிய கட்டுப்பாடு நடைமுறைக்கு வந்த பிறகு, நிறுவனங்கள் தூய கடுகு எண்ணெயை மட்டுமே தயாரிக்க அனுமதிக்கப்படும். கடுகு எண்ணெயுடன் மற்ற சமையல் எண்ணெய்களைக் கலப்பதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் கடுகு எண்ணெயின் தூய்மையை உறுதி செய்வதற்காக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஐ) இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
எஃப்எஸ்எஸ்ஐ ,ஆகஸ்டில் நாடு முழுவதும் இருந்து 4,500 சமையல் எண்ணெய்களின் மாதிரிகளை தரப்பரிசோதனைக்காக சேகரித்தது. சந்தையில் கலப்படம் செய்யப்பட்ட சமையல் எண்ணெய் விற்பனையைத் தடுப்பதற்காக டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை மற்றும் கொல்கத்தாவிலிருந்து தலா 50 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன . மேலும் பெருநகரங்களைத் தவிர சிறு நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து தலா ஆறு எட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.