இந்தியா

குழந்தைகள் பவுடர் பாதுகாப்பானதா? - மாதிரிகளை சேகரித்த மத்திய அரசு

குழந்தைகள் பவுடர் பாதுகாப்பானதா? - மாதிரிகளை சேகரித்த மத்திய அரசு

webteam

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் மீதான புகாரை தொடர்ந்து மற்ற நிறுவனங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கான பவுடர்,ஷாம்பூ உள்ளிட்ட பொருட்களின் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன.

பிரபல நிறுவனமான ஜான்சன் அன்ட் ஜான்சன் குழந்தைகளுக்கான டால்கம் பவுடர், ஷாம்பூ உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அதில் ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தின் பவுடரை சிறுவயது முதலே பயன்படுத்தியதால், தனக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்பட்டதாக அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இந்திய ரூபாய் மதிப்பில் 2600 கோடி ரூபாய் அபராதத் தொகையாக வழங்க உத்தரவிட்டது. இதனால் ஜான்சன் பவுடர் குறித்து இந்திய மக்களிடமும் அச்சம் ஏற்பட்டது.

இதனையடுத்து ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவன டால்கம் பவுடர் தரக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா என்பதை அதன் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்தது. 

இந்நிலையில் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம், குழந்தைகளுக்கான 150 பவுடர்களின் மாதிரிகளையும் மற்றும் 50 ஷாம்பூக்களின் மாதிரிகளையும் சேகரித்துள்ளது. மேலும் அந்தப் பொருட்களை தயாரிப்பதற்கான மூலப் பொருட்களின் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன.  இவை அனைத்தும் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் இந்தியாவில் விற்கப்படும் குழந்தைகளுக்கான பொருட்கள் பாதுகாப்பானதாக உள்ளதா என்பதை உறுதி செய்வதற்காகவே இந்தப் பரிசோதனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.