இந்தியா

12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் விவகாரத்தில் நீடிக்கும் இழுபறி

கலிலுல்லா

12 எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரத்தில் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ள பேச்சுவார்த்தையை புறக்கணிக்கப்போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் அதனை ரத்து செய்யவேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இப்பிரச்னை காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கூட்டத்தொடரின் கடைசிவாரம் என்பதால் இன்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு 12 எம்பிக்கள் சார்ந்த 4 கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

ஆனால் இதனை நிராகரித்துள்ள அக்கட்சிகள், சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து எதிர்க்கட்சிகளையும் அழைத்துப் பேசாமல் வெறும் 4 கட்சிகளை மட்டும் அழைப்பதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளன. இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி இன்று ஆலோசிக்க உள்ளதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.