Bjp-Congress File image
இந்தியா

கர்நாடக வெற்றி எதிரொலி: பாஜகவை வீழ்த்த ஒன்றிணையும் எதிர்க்கட்சிகள்! விரைவில் பீகாரில் ஆலோசனை?

webteam

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ள வெற்றியை தொடர்ந்து, அடுத்த வருடம் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக யூகம் அமைக்க பீகாரின் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்த உள்ளன.

பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனையில் திமுக உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கு பெறும் எனவும் காங்கிரஸ் கட்சி இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதாக உறுதியளித்துள்ளதாகவும் ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆலோசனை அடுத்த வாரம் நடைபெறலாம் எனவும், இதில் பங்கேற்க உள்ள கட்சிகளுடன் இதுதொடர்பாக தற்போதிருந்தே பேச்சுவார்த்தை நடைபெறுவதாகும் அவர்கள் தெரிவித்தனர்.

Rahul Gandhi | Nitish Kumar | kharge

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவர்கள் சார்பில், “பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக்கான ஏற்பாடுகளை செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் நிறுவனத் தலைவரான லாலுபிரசாத் யாதவும் இதில் பங்கேற்பார்.

CM Stalin

போலவே திமுக, சமாஜ்வாதி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு, மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா இந்த ஆலோசனையில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளன. விரைவில் விவரங்கள் உறுதி செய்யப்படும். பீகாரில் ஆலோசனைக் கூட்டம் நடத்தலாம் என மம்தா பானர்ஜி தெரிவித்த கருத்தை நிதிஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ஏற்றுக்கொண்டு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்

பாரதிய ஜனதா கட்சியை கொள்கை ரீதியாக எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் என பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் கருதுகின்றனர். மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதி ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் கூட்டணியை வலுவாக அமைக்கலாம் என்பது அவர்களின் திட்டம். ஆம் ஆத்மி கட்சி மற்றும் வேறு சில கட்சிகளுடன் தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவர்களும் இந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை மாநாட்டில் இணைய அழைத்து வருகிறோம்” என்றனர்.

Sharad Pawar

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை, கர்நாடக மாநில முதல்வர் தேர்வு முடித்த பிறகு பேச்சுவார்த்தை நடைபெற்றால் காங்கிரஸ் கட்சி அதில் கலந்து கொள்வது எளிதாக இருக்கும் என ஆலோசனையை அடுத்த வாரம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் அழைக்கப்பட்டால், பெங்களூரு நகரிலேயே மாநாட்டுக்கு முந்தைய ஆலோசனைகள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.

‘கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வலுவான பெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடித்தது போலவே, அடுத்த வருட மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும்’ என எதிர்க்கட்சிகள் குறிக்கோள் கொண்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணையுமா என்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில், கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளால் தற்போது சூழல் மாற்றமடைந்துள்ளது. குறிப்பாக ‘காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கத் தயார். காங்கிரஸ் கட்சியும் மாநிலக் கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்’ என மம்தா பானர்ஜி பேசி உள்ளது இந்த மாற்றத்தை வலியுறுத்துகிறது என பிற எதிர்க்கட்சி தலைவர்களின் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

Mamata Banerjee

அரசியல் ஜாம்பவான் என கருதப்படும் முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் மற்றும் மத்திய அமைச்சராக பணியாற்றிய சரத் பவார் இதே போன்ற நிலைப்பாட்டை வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரா மாநிலத்தில் எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணியை வலுப்படுத்த சரத் பவார் நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கி விட்டார் என அந்த மாநில அரசியல் தலைவர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். கர்நாடகா மாநிலம் அளித்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் பாஜகவை அடுத்த வருடம் வீழ்த்தலாம் என பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடந்த இரு நாட்களாக பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சூழலில் பீகார் தலைநகர் பாட்னாவில் (அல்லது பெங்களூருவில்) நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் ஆலோசனை மகாநாடு தேசிய அரசியலில் சுவாரஸ்யமான திருப்பங்களை அளிக்கலாம் என கருதப்படுகிறது.

- கணபதி சுப்ரமணியம்.