மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் முகநூல்
இந்தியா

பதவியேற்ற மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான்! எழும்பிய கண்டன குரல்... காரணம் என்ன?

நீட் தேர்வு முறைகேடு பிரச்னை நாடு முழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நாடாளுமன்றத்திலும் எதிர்ப்புக் குரல்கள் பதிவாகின. மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவை உறுப்பினராக பதவியேற்றபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.

PT WEB

இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே மாதம் 5-ஆம் தேதி நடைபெற்றது. 24 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கடந்த 4-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கருணை மதிப்பெண் வழங்கியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வினாத்தாள்களை வாங்கியதாக பீகார், குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களில் பலர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், தேசிய தேர்வு முகமையின் தலைவர் சுபோத் குமார் மாற்றப்பட்டார்.

மத்திய அமைச்சகத்தின் பரிந்துரைப்படி நீட் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. பீகார், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் விசாரணை மேற்கொள்ள சிறப்பு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக 63 பேரும், குஜராத் கோத்ராவை சேர்ந்த 30 பேரும் ஏற்கனவே தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

தற்போது, பீகாரில் சர்ச்சைக்குரிய பயிற்சி மையங்களில் தேர்வு எழுதி கருணை மதிப்பெண் பெற்ற 17 பேரையும் தேசிய தேர்வு முகமை தகுதிநீக்கம் செய்துள்ளது. இந்த விவகாரங்களுக்கு இடையே தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொண்டனர். அதில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியேற்றபோது எதிர்க்கட்சிகள் நீட் தேர்வு முறைகேட்டிற்கு எதிராக முழக்கம் எழுப்பின.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் தர்மேந்திர பிரதான் பதவியேற்றுக் கொண்டார். இனிவரும் நாட்களில் காங்கிரஸ் உள்ளிட்ட I.N.D.I.A. கூட்டணிக் கட்சியினர் நீட் முறைகேடு முறைகேடு பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.