அக்ஷய் ஷிண்டே என்னும் ஒரு தனியார் பள்ளியில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளி கடந்த ஆகஸ்ட் 16 அன்று 3 மற்றும் 4 வயது சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல்கள் செய்துள்ளார். இது தொடர்பாக பெற்றோர்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அவர் கடந்த 17ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கு மகாராஷ்டிராவில் பெரும் பேசுபொருள் ஆகியுள்ளதால் கொதித்தெழுந்த பெற்றோர்கள் கடந்த 20ம் தேதி பள்ளியை முற்றுகையிட்டு சூறையாடினர். ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ரயில் பாதைகளை மறித்து முற்றுகையிட்டதால் மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஆர்த்தி சிங் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளதாக மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். அதே நேரத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த வழக்கு விரைவாக விசாரிக்கப்படும் என்றும், குற்றவாளிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றும் ஏக்நாத் ஷிண்டே கூறினார்.
இச்சம்பவத்திற்குப் பிறகு, மகாராஷ்டிர அரசு, மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஒரு மாதத்திற்குள் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
"மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் துறையின் புதிய வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டும், பள்ளி வளாகத்திற்குள் பொருத்தமான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட வேண்டும். இணங்கத் தவறினால் நிதி மானியங்களை நிறுத்துதல் அல்லது பள்ளியின் செயல்பாட்டு அனுமதியை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் ஏற்படலாம்" என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
சிசிடிவி காட்சிகள் வாரத்திற்கு மூன்று முறையாவது ஆய்வு செய்யப்பட வேண்டும். மேலும், இது தொடர்பான ஏதேனும் சம்பவம் கேமராக்களில் படம்பிடிக்கப்பட்டால் காவல்துறையைத் தொடர்புகொள்வது பள்ளி மேலாளரின் பொறுப்பாகும் என அவ்வுத்தரவில் கூறப்பட்டிருந்தது.
அதுமட்டுமல்லாது உள்ளூர் காவல் நிலையத்தின் உதவியுடன் அனைத்து ஊழியர்களின் முழுமையான பின்னணி சோதனைகளையும் நடத்த பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக அப்பள்ளியின் மேலாளர், வகுப்பு ஆசிரியர் மற்றும் பெண் உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இரண்டு சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை விசாரிக்கும் பணியில் தவறிழைத்த குற்றத்திற்காக மூத்த காவல் ஆய்வாளர் உட்பட 3 காவல்துறை அதிகாரிகளும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் சம்பத்தப்பட்ட காவல் அதிகாரிகள் தங்கள் புகார்களை கவனிக்கும் முன், சிறுமிகளின் பெற்றோரை பத்லாபூர் காவல் நிலையத்தில் 11 மணி நேரம் காத்திருக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.
பெற்றோரின் போராட்டத்தை அடுத்தே காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக மும்பை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாது இவ்விவகாரத்தை தற்போது எதிர்கட்சிகளும் கையில் எடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு மகாவிகாஷ் அகாடி கூட்டணியினர் கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததை அடுத்து மும்பையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் கொட்டும் மழையில் போராட்டம் நடைபெற்ற வருகிறது. காங்கிரஸ் கட்சியினரும் இப் போராட்டத்தில் இணைந்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி எதிர்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதே சமயம் காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் சிவசேனா ஆகிய கட்சிகள் இணைந்த மகாவிகாஸ் அகாடி கூட்டணி இந்த விவகாரத்தை அரசியலாக்குவதாகக் கூறி பாஜக மகிளா மோர்ச்சாவும் போராட்டம் நடத்தி வருகிறது.