குடியுரிமை திருத்தச் சட்டம் ட்விட்டர்
இந்தியா

பினராயி விஜயன் To அகிலேஷ் யாதவ்.. CAA அமலை கடுமையாக எதிர்க்கும் எதிர்க்கட்சி தலைவர்கள்!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியிருப்பதற்கு, மீண்டும் நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Prakash J

நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறலாம் என்கிற நிலையில், பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான குடியுரிமை திருத்தச் சட்டம் Citizen Amendment Act (CAA) நேற்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்த அறிவிக்கையையும் மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. ’2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் கட்டாயம் அமல்படுத்தப்படும்’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி மசோதா நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகள் கழித்து, குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியிருப்பதற்கு, மீண்டும் நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதல்வர்:

”இந்திய மக்களிடையே பேதங்களைத் தோற்றுவிக்க வழிவகை செய்யும் இந்தச் சட்டத்தால் எந்தவிதமான நன்மையோ, பயனோ இருக்கப் போவதில்லை. இந்தச் சட்டம் முற்றிலும் தேவையற்ற ஒன்று என்பதுடன் ரத்து செய்யப்பட வேண்டியது என்பதுதான் இந்த அரசின் கருத்தாகும். எனவே, ஒன்றிய அரசு நிறைவேற்றியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் இடமளிக்காது. இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு சட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காது”.

பினராயி விஜயன், கேரள முதல்வர்

கேரள முதல்வர் பினராயி விஜயன்

“இது மக்களிடையே பிளவையும், வகுப்பாத உணர்வையும் தூண்டுவதுடன் அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைக்கு குழி பறிக்கும் செயலாகும். சம உரிமை உள்ள இந்திய குடிமக்களை பல அடுக்குகளாக பிரிக்கும் இந்த நடவடிக்கையை நாம் ஒற்றுமையாக எதிர்க்க வேண்டும். சங்பரிவாரின் இந்துத்துவ வகுப்புவாத அஜெண்டாவின் ஒரு பகுதியாக இதை பார்க்க முடிகிறது. முஸ்லிம் சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாக கருதும் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை கேரளாவில் அமல்படுத்தமாட்டோம் என்று அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அதைத்தான் இப்போதும் அடிக்கோடிட்டு கூறுகிறோம். இந்த வகுப்புவாத சட்டத்தை எதிர்ப்பதில் கேரளா முழுவதும் ஒன்றுபட்டு நிற்கும்"

அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முதல்வர்

”பணவீக்கத்தால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் புலம்பும் வேளையில், வேலையில்லாத இளைஞர்கள் வேலைவாய்ப்பிற்காக வீடு வீடாகப் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், அந்த உண்மையான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, இவர்கள் CAA கொண்டு வந்துள்ளனர். ஒட்டுமொத்த நாடும் சிஏஏவை எதிர்க்கிறது. அசாம் மற்றும் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநில மக்களுக்கும் பாஜக துரோகம் செய்துள்ளது. மக்களவை தேர்தலில் இதற்கு மக்கள் பதில் சொல்வார்கள்”.

மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர்

"குடியுரிமை திருத்தச் சட்டத்தில் நல்லவை இருந்தால் அதை ஆதரிப்போம். கெட்டவை இருந்தால் கண்டிப்பாக அதை திரிணாமுல் காங்கிரஸ் எதிர்க்கும். ரமலான் மாதம் தொடங்கும் சமயத்தில் இதை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது என நான் அறிவேன். மக்கள் அமைதி காக்க வேண்டும், வதந்திகளை நம்பக் கூடாது".

மம்தா பானர்ஜி

ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் தலைவர்

"தேர்தல் பத்திர விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடுமை காட்டியுள்ள நேரத்தில், அதை திசைதிருப்பவே இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் இதை அமல்படுத்துவதன் மூலம், அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் தேர்தல் ஆதாயம் அடையப் பார்க்கிறது பாஜக”.

அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி கட்சித் தலைவர்

“10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் லட்சக்கணக்கான குடிமக்கள் ஏன் இந்திய நாட்டின் குடியுரிமையை துறந்தனர் என்பதையும் பாஜக அரசு விளக்க வேண்டும். நாட்டின் குடிமக்கள் வாழ்வாதாரத்திற்காக வெளிநாட்டிற்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சூழ்நிலையில், குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் என்ன நடக்க போகிறது? பாஜகவின் தேர்தல் நேர திசைதிருப்பும் வேலைகளையெல்லாம் மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் இவர்களின் பொய்களுக்கெல்லாம் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்”.