'INDIA' கூட்டணி  புதிய தலைமுறை
இந்தியா

இந்தியா கூட்டணி: நாளை மும்பையில் 3வது ஆலோசனை கூட்டம்! முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் கூட்டம், மகாராஷ்ட்ரா தலைநகர் மும்பையில் நாளை (ஆகஸ்ட் 31) நடைபெறுகிறது.

Prakash J

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் கூட்டம், மகாராஷ்ட்ரா தலைநகர் மும்பையில் நாளை (ஆகஸ்ட் 31) நடைபெறுகிறது. இந்த கூட்டணி சார்பில் ஒவ்வொரு மாதமும் மாபெரும் பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணியைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் மும்பையில் நடைபெறும் 2 நாள் ஆலோசனையில் கலந்துகொள்ள உள்ளனர். சரத்பவார் மற்றும் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் மும்பையில் இந்தியா கூட்டணி ஆலோசனைக்கான திட்டங்களை ஒருங்கிணைத்து வருகின்றனர்.

கூட்டணி எதிர்கட்சிகள்

இந்த ஆலோசனையில் காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 28 கட்சிகள் கலந்துகொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இரண்டு (பீகார், கர்நாடகா) கூட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில், மூன்றாவது கூட்டத்தில், குறைந்தபட்ச செயல் திட்டம், தொகுதிப் பங்கீடு, இந்தியா கையில் எடுக்க வேண்டிய முக்கியப் பிரச்னைகள் போன்ற அம்சங்களில் கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் உத்தவ்தாக்கரே அணியைச் சேர்ந்த சிவசேனா எம்பியான பிரியங்கா சதுர்வேதி, ”450 ரூபாய் இருந்த எரிவாயு சிலிண்டர் விலையை 1100 ரூபாய்க்கு உயர்த்தி பெண்களை வருத்திவிட்டார்கள். அப்போது வராத பாசம் இப்போது ஏன் வந்தது? இந்தியா கூட்டணியைப் பார்த்து பயந்தே பாஜக கூட்டணி எரிவாயு சிலிண்டர் விலையை குறைத்துள்ளது” என பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதுபோல் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவும், ”இந்தியா கூட்டணியில் பிரதமராக வர வாய்ப்புள்ளவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். ஆனால், பாரதிய ஜனதாவின் முகமாக ஒருவரைத் தவிர யார் இருக்கிறார்கள்? கர்நாடகத்தில் பஜ்ரங்க் பலி என்ற முழக்கம் கைகொடுக்கவில்லை. கர்நாடகத்தில் தோல்வியடைந்தபிறகு பாரதிய ஜனதா யாரை முன்னிறுத்தும்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.