நிர்மலா சீதாராமன், அபிஷேக் பானர்ஜி, தயாநிதி மாறன் pt web
இந்தியா

“பட்ஜெட்.. மோடியின் அரசியல் பிழைப்பிற்கான முதலீடு” - மக்களவையில் விளாசி தள்ளிய எதிர்க்கட்சிகள்!

பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.

Angeshwar G

கடும் அமளி

மக்களவை கூடியவுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களுடைய இருக்கைகளில் எழுந்து நின்று முழக்கங்களை எழுப்பி பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பிற அலுவல்களை ஒத்திவைத்து பட்ஜெட் குறித்து விவாதம் நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர். ஆனால் கேள்வி நேரம் முடங்கக் கூடாது எனவும், எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்னைகளை பட்ஜெட் விவாதத்தின் போது பரிசீலிக்கலாம் எனவும் சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

பட்ஜெட் 2024 - 25

பின்னர் பட்ஜெட் மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்ற போது காங்கிரஸ் கட்சியின் ஷெல்ஜா, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் பானர்ஜி மற்றும் திமுகவின் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பிஹார் மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களுக்கு மட்டும் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளும் விதத்தில் பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன என குற்றம் சாட்டினர். அபிஷேக் பானர்ஜி பேசிய கருத்துக்களுக்காக பாரதிய ஜனதா எம்.பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்து குரல் எழுப்பியதால் அவையில் அமளி ஏற்பட்டது.

மோடியின் அரசியல் பிழைப்பிற்கான பட்ஜெட்

அதுமட்டுமின்றி சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் அபிஷேக் பானர்ஜிக்கும் இடையே கடும் விவாதம் ஏற்பட்டது. அவையில் பேசிய அவர், “உங்கள் பட்ஜெட்டில் ஏழை மக்களுக்கு உணவு, உடை, வீடு தந்திருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள். மேற்கு வங்க அரசு, கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசின் திட்டங்களை மாநிலத்தில் செயல்படுத்துவதில் இருந்து தவறிவிட்டதாக மத்திய நிதிஅமைச்சர் மாநிலங்களவையில் கூறியிருக்கிறார். மேற்கு வங்கத்திற்கு நீங்கள் எவ்வளவு நிதி அளித்திருக்கிறீர்கள் என்று உங்களால் வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா?

இந்த பட்ஜெட் இரண்டு நபர்களால் மேலும் இருவருடன் நல்லுறவு பேணுவதற்காக தயாரிக்கப்பட்டதாகத் தெரிகிறது. காலம் மாறிவிட்டது. பிரதமர் நரேந்திரமோடி தற்போது அழுத்தம் ஏற்படுத்தும் மற்றும் ஊசலாடும் கூட்டணியை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். இந்த நாட்டின் எதிர்காலத்தில் முதலீடு செய்வதற்கு பதிலாக, பிரதமர் மோடியின் அரசியல் பிழைப்பிற்காக முதலீடு செய்வது துரதிர்ஷ்டவசமானது” என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி யாருக்கு உழைக்கிறார்?

மக்களவையில் பேசிய திமுக எம்பி தயாநிதி மாறன், தமிழ்நாட்டின் கோரிக்கைகள் பட்ஜெட்டில் நிறைவேற்றப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.

அவர் கூறியதாவது, “முதலமைச்சர் முக ஸ்டாலின் பொறுப்பேற்கும்போது, வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்லாது, வாக்களிக்காதவர்களுக்கும் உழைப்பேன் என தெரிவித்தார். ஆனால் பிரதமர் மோடி, தனது கட்சிக்கு வாக்களித்தவர்களை விட, தனக்கு யார் ஆதரவளிக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே உழைக்கிறார்.

பட்ஜெட்டில் 20 லட்சம் இளைஞர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி பெறுவார்கள் என்று நிதியமைச்சர் சொல்லியிருக்கிறார். ஆனால், திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். இதன்மூலம் ஆண்டுக்கு 50 லட்சம் இளைஞர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற முடியும். மாநில அரசு ஆண்டுக்கு 50 லட்சம் இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி அளித்தால், ஒன்றிய அரசு அனைத்து வசதிகளையும் வைத்துக் கொண்டு 20 லட்சம் பேருக்குத்தான் திறன் மேம்பாட்டு பயிற்சி தர முடியுமா?” என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “எனக்கு வந்தால் ரத்தம், உங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா” என்ற வசனத்தையும் குறிப்பிட்டார்.

பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய திரிபுரா பாரதிய ஜனதா எம்பி பிப்லப் தேப், அனைத்து மாநிலங்களிலும், அனைத்துத் துறைகளின் நலனும் பாதுகாக்கப்படும் என்றும், மாநிலங்களுக்கு கூடுதலாக 4.82 லட்சம் கோடி ரூபாய் மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 2047 வரை தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருக்கும் என்றும், அப்போது இந்தியா புதிய உச்சங்களை எட்டும் எனவும் தெரிவித்தார்.