இந்தியா

குறிவைக்கப்படும் பினராயி விஜயன்... கேரளாவில் தகிக்கும் 'சாதி அரசியல்'!

webteam

கேரள முதல்வர் பினராயி விஜயன் நான்கரை ஆண்டுகால பதவியில் சாதிய ரீதியிலான தாக்குதல்களை தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறார். முதல்வர் பினராயி விஜயன் 'திய்ய' அல்லது ஈழவா என்று அழைக்கப்படுகிற சமூகத்தைச் சேர்ந்தவர். பல ஆண்டுகளாக ஆதிக்க சாதியினரால் இந்த சமூக மக்களுக்கு சம வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது. இந்த சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பாரம்பரியமாக தென்னை, பனை மரம் ஏறுவது, கள் இறக்குவதை குலத்தொழிலாகக் கொண்டவர்கள். இதை முன்வைத்து பலசமயங்களில் அவரைத் தாக்கி வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பெண்களை சபரிமலை கோயிலுக்குள் அனுமதிப்பது தொடர்பான விவகாரத்தில், உச்ச நீதிமன்ற ஆணைப்படி, பெண்களை சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்கும் முடிவை பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு எடுத்தது. இந்த முடிவால் அவர் மீது கோபம் கொண்டிருந்த கேரள பாஜக துணைத் தலைவர் சிவராஜன் என்பவர், 'சபரிமலையின் புனிதத்தை காக்க முடியாவிட்டால், போய் தென்னை மரம் ஏறுங்கள். முதல்வராக வருவதற்கு பதிலாக மரம் ஏறி பிழைப்பு நடத்துங்கள்'' என்று பினராயி விஜயனைப் பார்த்து சாதிய ரீதியாக ஒருமையில் வசைபாடினார்.

இந்தச் சம்பவம் அப்போது கேரளாவில் பெரிய சர்ச்சைகளை உருவாக்கியது. பாஜக மீது கடுமையான விமர்சனம் ஏற்பட, அதன்பின் `ஜென்மபூமி' எனப்படும் பாஜகவின் பத்திரிகையில் பினராயி விஜயனின் சாதி குறித்து கார்ட்டூ்ன் வெளியிடப்பட்டு, பகிரங்க மன்னிப்பு கேட்கப்பட்டது. இதே ஆண்டில் இதே விவகாரத்தில் 50 வயது பெண் ஒருவர், முதல்வர் பினராயியின் சாதியைக் குறிக்க ஒரு தகாத வார்த்தையைப் பயன்படுத்தி விமர்சித்து இருந்தார்.

இதோ இப்போது இன்னொரு சம்பவம். கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா `ஐஸ்வர்ய யாத்திரை' என்று மாநிலம் முழுவதும் பேரணி நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன், இந்தப் பேரணியின்போது நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய, கண்ணூரைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) கே.சுதாகரன், ``பினராயி விஜயன் யார்... பினராயின் குடும்பப் பின்னணி என்ன? நமக்கு தெரியும் பினராயி குடும்பம் `செத்துக்காருடே குடும்பம்' (கள் இறங்குபவர்கள்). அந்தக் குடும்பத்தில் இருந்து சிவப்புக் கொடியைப் பிடித்துக் கொண்டு உங்களை முன்னால் அழைத்துச் சென்ற பினராயி விஜயன், இப்போது ஹெலிகாப்டரில் பயணம் செய்து வருகிறார்" என்று மீண்டும் சாதியை முன்வைத்து விமர்சித்தார்.

இப்படித்தான் ஒவ்வொரு முறையும், பினராயி குறித்து விமர்சனங்களை முன்வைக்க அவரின் சாதியை வைத்து இழிவுபடுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் கேரள எதிர்க்கட்சியினர். முதல்வர் பினராயி விஜயனின் தந்தை ஒரு கள் இறக்கும் தொழிலாளி. குடும்ப வறுமை காரணமாக, சிறுவயதில் பினராயி விஜயன் பீடி சுற்றும் வேலைபார்த்துள்ளார். சிறு வயதில் கள்ளும் பீடியும்தான் பினராயி விஜயன் குடும்பத்திற்கு உணவளித்தது. தற்போது முதல்வரான பின்பு, இந்த விஷயங்களை அவரே சொல்லி இருக்கிறார்.

தன் மீதான சாதிய தாக்குதலுக்கு பினராயி விஜயன் எப்போதும் கொடுக்கும் பதில்:

``என்னைவிட என் சாதி அவர்களுக்குதான் அதிக நினைவுக்குவருகிறது. நான் முன்பும் கூறியிருக்கிறேன். எப்போதும் கூறுவேன். ஆம், நான் ஒரு கள் இறக்கும் தொழிலாளியின் மகன்தான். அதில் நான் பெருமைப்படுகிறேன். இதை மற்றவர்கள் சொல்லும்போது அவமானகரமாக பார்க்கவில்லை. எனது சகோதரர்கள் கள் இறக்கும் தொழிலில்தான் செய்தார்கள். இப்போதுதான் பேக்கரி வைத்துள்ளார்கள். கள் இறக்கும் தொழிலாளியின் மகன் என்பதில் எப்போதும் எனக்கு பெருமையே. இதில் எந்த குற்றமும் இல்லை.

நீதிக்குப் புறம்பான செயல்களைச் செய்வோரின் மகனாக இருந்தால்தான் வெட்கப்பட வேண்டும். சாதிய ரீதியாக ஒருவரை புண்படுத்துவது கேரள அரசியலில் புதிய டெக்னிக். குறிப்பிட்ட சாதியில் பிறந்தவர்கள் குறிப்பிட்ட தொழில்தான் செய்ய வேண்டும் என்பது முன்பு இருந்தது. இப்போதும் குறிப்பிட்ட சாதியில் பிறந்தவர்கள் அதே தொழிலை செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களைப் பற்றி என்ன பேச இருக்கிறது."

இப்போதும் சுதாகரன் குறித்த சர்ச்சைக்கும் பினராயி விஜயன் இதே பதிலைத்தான் கொடுத்துள்ளார். பினராயி விஜயனின் இந்த பக்குவமான பதில், வரவேற்பைப் பெற்றாலும், மாநிலத்தின் முதல்வர் என்றுகூட பார்க்காமல் பினராயியை சாதிய ரீதியாக கொச்சைப்படுத்தும் போக்கு தொடர்ந்துகொண்டே இருக்கிறது. கேரளாவில் இந்த `சாதி அரசியல்' எப்போது துடைத்தெறியப்படும் என்பது கேள்விக்குறியே!