இந்தியாவின் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனம் பாரத் சஞ்சார் நிகாம் லிமிட்டெட். அதாவது பிஎஸ்என்எல். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் கடந்த 22/10/2024 அன்று தனது 7 புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியது. மேலும், தனது புதிய லட்சினையையும் (லோகோ) அறிமுகப்படுத்தியது. டெல்லியில் உள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
லோகோ அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், புதிய சர்ச்சை உருவெடுத்தது. அந்த லோகோ காவிநிறத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. பழைய லோகோ நீல நிறத்தில் இருந்த நிலையில் அதன்கீழ் connecting india என்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், புதிய லோகோவில் connecting bharat என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் லோகோவும் நீல நிறத்தில் இருந்து காவி நிறமாக மாற்றப்பட்டிருந்தது. இதற்கும் பல்வேறு எதிர்கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கும் முன்பாக தேசிய மருத்துவக் ஆணையத்தின் லோகோவிலும் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அந்த லோகோவின் மையத்தில் இந்துக் கடவுளான தன்வந்திரியின் புகைப்படம் சேர்க்கப்பட்டிருந்தது. தேசிய மருத்துவ ஆணையம் இந்தியா என்று இருப்பதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் பாரத் என மாற்றப்பட்டிருந்தது. அப்போதும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில்தான், புதிய சர்ச்சையாக பிஎஸ்என்எல் லோகோவும் மாற்றப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மதுரை எம்பி சு.வெங்கடேசன், “தொலைதொடர்பு சந்தையை தனியாருக்கு தந்துவிட்டு BSNL க்கு "புதிய லோகோ" வை தந்து மகிழ்ந்துள்ளது ஒன்றிய அரசு. காவி நிறம்... "இந்தியாவை" இணைக்கிறோம் என்பதற்குப் பதிலாக "பாரத்" ஐ இணைக்கிறோம் என்று மாற்றம். திருவள்ளுவரா.. வந்தே பாரத்தா… பிஎஸ்என்எல் லா எல்லாத்துக்கும் காவி பெயிண்ட் அடிப்பது மட்டுந்தான் ஒன்றிய அரசின் முழுநேர தேசப்பணி” என விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தளத்தில் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது, “வந்தே பாரத் ரயில், டிடி நியூஸ் சேனல் லோகோவைத் தொடர்ந்து தற்போது ஒன்றிய பா.ஜ.க. அரசு பி.எஸ்.என்.எல். லோகோவையும் காவி நிறத்திற்கு மாற்றியுள்ளது. முன்பிருந்த லோகோவில் இந்தியாவை இணைப்போம் என்றிருந்தது. தற்போது பாரதத்தை இணைப்போம் என்றுமாற்றப்பட்டுள்ளது. மேலும், அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிறங்கள் பா.ஜ.க.வின் கொடியின் நிறத்தை ஒத்திருக்கிறது.
புதியதாக கட்டிய நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தால் எங்கும் காவி நிறம். அதேபோல நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பணியிலிருக்கும் ஊழியர்களின் சீருடைகள் காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “காவி என்பது நாட்டில் உள்ள வண்ணம், நமது தேசியக் கொடியில் உள்ள வண்ணம், பிஎஸ்என்எல் லோகோவை மாற்றியதில் எந்த உள்நோக்கமும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.