நிதி ஆயோக் கூட்டம் முகநூல்
இந்தியா

இன்று தொடங்கும் நிதி ஆயோக் கூட்டம்! புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள்! காரணம் என்ன?

எதிர்க்கட்சிகள் புறக்கணிப்புக்கு மத்தியில் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட INDIA கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் மாநில முதலமைச்சர்கள் புறக்கணித்திருப்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

PT WEB

செய்தியாளர்: ஸ்டாலின்

எதிர்க்கட்சிகள் புறக்கணிப்புக்கு மத்தியில் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட INDIA கூட்டணிக் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநில முதலமைச்சர்கள் புறக்கணித்திருப்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கும் நிதி ஆயோக் அமைப்பின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. வழக்கமான வருடாந்திர கூட்டமாக நடைபெறும் இந்த கூட்டம், INDIA கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் மாநில முதலமைச்சர்கள் புறக்கணிப்பை அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக மாறியுள்ளது. மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக செயல்பட்டு வந்த மத்திய திட்டக்குழுவை 2014ல் பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கலைத்

துவிட்டது.

பின்னர், நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டது. தேசத்திற்கான வளர்ச்சி கொள்கைகளை வகுத்து மாநில முதலமைச்சர்கள் பரிந்துரைக்கும் அம்சங்களை இந்த அமைப்பு விவாதிக்கிறது. இன்றைய கூட்டத்தை பொறுத்தவரை, வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்றும் அகண்ட பாரதம்- 2047 என்ற இலக்கு குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. மூன்றாவது முறை பாஜக கூட்டணி அரசு அமைந்த பிறகு மற்றும் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகான முதல் கூட்டம் இதுவாகும்.

ஆனால், எதிர்கட்சிகளின் புறக்கணிப்பை அடுத்து நிதி ஆயோக் கூட்டம் அரசியல் ரீதியாக பேசு பொருளாகியுள்ளது. மத்திய பட்ஜெட்டில் இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுப்பிய எதிர்கட்சிகள், இக்கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதலமைச்சர்களான கர்நாடகாவின் சித்தாராமையா, தெலங்கானாவின் ரேவந்த் ரெட்டி, ஹிமாச்சல் பிரதேசத்தின் சுக்விந்தர் சுகு மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிங், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் புறக்கணித்துள்ளனர்.

அதேநேரம், கூட்டத்தில் பங்கேற்று மத்திய அரசின் பாகுபாட்டை கண்டித்து குரல் கொடுப்பேன் என் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். நிதி ஆயோக் கூட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும் பங்கேற்கவில்லை. புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த பின்னர் அடுத்த மாத இறுதியில் டெல்லிக்கு சென்று பிரதமர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சரை சந்திக்க ரங்கசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நிதி ஆயோக் அமைப்பு மாநிலத்தின் பொருளாதார மற்றும் வளர்ச்சி திட்டங்கள், வேளாண்மை, நீராதாரம், கல்வி, சுகாதாரம், வர்த்தகம் செய்தல், நிர்வாக நடவடிக்கைகள் உள்பட பல்வேறு வகைகளான செயல்பாடுகளை ஆய்வு செய்கிறது. இதற்காக பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என 3 வகையாக பிரித்து வரிசைப்படுத்தி ஆய்வு செய்யும். இந்த ஆய்வின் முடிவுகள் மூலம் மாநிலங்களுக்கு தேவையான நிதி மற்றும் திட்டங்களை மத்திய அரசு வகுக்கும்.