இந்தியா

ஏகே 47 போல பொய்களை எதிர்க்கட்சிகள் கக்குகின்றன - பிரதமர் மோடி

ஏகே 47 போல பொய்களை எதிர்க்கட்சிகள் கக்குகின்றன - பிரதமர் மோடி

webteam

எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த சிலர் பொய் சொல்லும் இயந்திரங்களாக இருப்பதாகவும், ஏகே 47 துப்பாக்கி போல பொய்களை கக்கி வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். 

5 நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த பாரதிய ஜனதா தொண்டர்களுடன் காணொலியில் உரையாடிய பிரதமர் மோடி, நாட்டின் தலையெழுத்தை மாற்றி எழுத பாரதிய ஜனதா அரசு பணியாற்றி வரும் நிலையில், பரம்பரை ஆட்சியை ஏற்படுத்த சிலர் கைகோர்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் கூட்டணி சேர்வது குறித்து பாரதிய ஜனதா தொண்டர்கள் கவலைப்படத் தேவையில்லை என்ற பிரதமர் மோடி, அவர்களை மக்கள் ஏற்கப் போவதில்லை, மாறாக வெறுக்கவே செய்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். 

எதிர்க்கட்சியினரின் எதிர்மறையான வேலைகள், நாட்டில் நடைபெறும் நற்பணிகளை ஏற்க மறுக்கும் குணம் மற்றும் ராணுவத்தை அவமதித்தல் ஆகியவற்றைக் கண்டு மக்கள் முகம் சுழிப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். ரபேல் விவகாரத்தில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை மறைமுகமாக குறிப்பிட்ட பிரதமர், சிலர் தினமும் ஒவ்வொரு கணக்கைத் தெரிவித்து வருவதாகவும் ஆனால் மக்களுக்கு உண்மை தெரியும் என்றும் கூறியுள்ளார். மேலும் எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த சிலர் பொய் சொல்லும் இயந்திரங்களாக இருப்பதாகவும், ஏகே 47 துப்பாக்கி போல பொய்களை கக்கி வருவதாகவும் தெரிவித்தார்.

எதிர்க் கட்சித் தலைவர்கள் ஒன்று சேர்வது நாட்டு மக்களுக்காக அல்ல என்று கூறிய பிரதமர், தங்கள் பிள்ளைகளுக்கு எதையாவது விட்டுச் செல்வதே அவர்களது நோக்கம் என்றும் விமர்சித்துள்ளார். மேலும் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு பாரதிய ஜனதா ஆட்சியில் நீடித்தால், தங்களது பரம்பரை ஆட்சிகளின் கதி என்ன ஆகுமோ என்று பலர் அச்சம் கொள்வதாக மோடி குறிப்பிட்டுள்ளார்.