காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக, நாடாளுமன்றம் ஐந்தாவது நாளாக முடங்கியுள்ளது.
மக்களவை இன்று காலை கூடியதும், காங்கிரஸ் மற்றும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதியில் கூடி டெல்லி வன்முறை தொடர்பாக விவாதம் நடத்த வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும், அவர்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் எனவும் முழக்கமிட்டனர். அவையை நடத்திக் கொண்டிருந்த கீர்த்தி சோலங்கி, உறுப்பினர்களை இருக்கைக்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டார். எனினும், அமளி நீடித்ததால் அவை இருமுறை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் கூடியபோது, அமளி தொடர்ந்ததால், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை கூடியதும் பேசிய அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மகளிர் தின வாழ்த்து தெரிவித்ததோடு, கொரோனா தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிக்கையை பல ஊடகங்கள் சரியாக வெளியிடவில்லை என வேதனை தெரிவித்தார். இந்நிலையில் டெல்லி வன்முறை தொடர்பாக விவாதம் நடத்த வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளி ஈடுபட்டதால், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த திங்கள்கிழமை கூடிய நாடாளுமன்றம் தொடர் அமளி காரணமாக 5-வது நாளாக முடங்கியுள்ளது. ஹோலி பண்டிகை விடுமுறைக்குப் பிறகு மார்ச் 11ஆம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, 7 சக எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காந்தி சிலை முன்பு நடைபெற்ற இப்போராட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.