மக்களவை தேர்தலில் 50 சதவிகித வாக்குப்பதிவு இயந்திரங்களின் ஒப்புகைச் சீட்டுகளை எண்ண வேண்டும் என எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன.
வரும் மக்களவை தேர்தலில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் உறுதி செய்வதற்கான வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் ஒரு தொகுதியில் உள்ள ஏதேனும் ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் ஒப்புகைச்சீட்டுகளை சரிபார்த்து கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
ஆனால் ஒப்புகைச்சீட்டுகளை 50 சதவிகித வாக்குப்பதிவு இயந்திரங்களில் சரிபார்க்க வேண்டும் என 21 எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. திமுக தலைவர் ஸ்டாலின், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் சார்பில் கே.சி வேணுகோபால், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட 21 கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்துள்ள இந்த மனுவை, உச்சநீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.