இந்தியா

பட்ஜெட் விலைப்பிரிவில் இன்று இந்தியாவில் அறிமுகமான OPPO A17k மொபைலின் டாப் 5 சிறப்பம்ங்கள்

பட்ஜெட் விலைப்பிரிவில் இன்று இந்தியாவில் அறிமுகமான OPPO A17k மொபைலின் டாப் 5 சிறப்பம்ங்கள்

ச. முத்துகிருஷ்ணன்

ஒப்போ நிறுவனம் இந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உள்ளது. இது அந்நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட Oppo A17 இன் மலிவு விலைப் பதிப்பாக அறிமுகமாகியுள்ளது. இரண்டு ஃபோன்களும் வடிவமைப்பின் அடிப்படையில் ஒரே மாதிரியாக இருக்கின்றன, இருப்பினும் Oppo A17k விலையை மிகவும் மலிவாக வைத்திருக்க சில அம்சங்களை சமரசம் செய்துள்ளது.

சுவாரஸ்யமாக, Oppo A17k மொபைலில் ஒரு பின்புற கேமரா சென்சார் மட்டுமே உள்ளது. நடைமுறையில், பட்ஜெட் ஃபோன்களில் முதன்மை கேமரா மட்டுமே திறமையாக செயல்படும் என்பதால் இந்த 8 மெகாபிக்சல் ஷூட்டர் ஒரு நல்ல செயல்திறனை வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைலின் டாப் 5 சிறப்பம்சங்களை தற்போது பார்க்கலாம்.

1. டிஸ்பிளே எப்படி..?

Oppo A17k ஆனது 1612×720 (HD+) பிக்சல்கள் வசதி கொண்ட 6.5-இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. திரையில் நிலையான 60Hz புதுப்பிப்பு வீத வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

2. கேமரா எப்படி..?

பின்புற பேனலில் 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது. செல்பி மற்றும் அரட்டைகளுக்காக முன்புற பேனலில் வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் உள்ளே 5 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. கேமரா பயன்பாடு நைட்மோட், பனோரமா மற்றும் கூகுள் லென்ஸ் போன்ற முறைகளுடன் வெளியாகி உள்ளது. முதன்மை கேமரா ஆட்டோ-ஃபோகஸை ஆதரிக்கிறது.

3. பக்கவாட்டில் பொறுத்தப்பட்ட கைரேகை சென்சார்:

பக்கவாட்டில் உள்ள பவர் பட்டன் கை ரேகை சென்சாராகவும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் நீர்த்தெறிப்பு (Splash) எதிர்ப்பிற்கான IPX4 மதிப்பீட்டை கொண்டுள்ளது. இந்த மொபைலும் ஓப்போ ஏ17 ஐப் போல மீடியாடெக் ஹீலியோ ஜி35 (MediaTek Helio G35 SoC) மூலம் இயக்கப்படுகிறது. ஆனால் ஓப்போ ஏ17 4 ஜிபி ரேமால் இயக்கப்படும் நிலையில் Oppo A17k 3ஜிபி ரேமால் இயக்கப்படுகிறது.

4. பேட்டரி எவ்வளவு?

Oppo A17k இன் மற்ற முக்கிய அம்சங்களில் 5000mAh பேட்டரி, டூயல்-சிம் ஸ்லாட், Wi-Fi 5, புளூடூத் v5.3 மற்றும் aptX, aptX HD மற்றும் LDAC போன்ற உயர்நிலை கோடெக்குகளுக்கான ஆதரவு ஆகியவை அடங்கும். ஃபோன் சார்ஜ் செய்ய மைக்ரோ யுஎஸ்பி போர்ட் வழங்கப்படுகிறது.

5. விலை எவ்வளவு தெரியுமா..?

ஒப்போ தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் Oppo A17K மொபைலின் விலை ரூ. 10,499 என குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த மொபைல் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பக மாடலில் மட்டுமே கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை குறைவு என்பதால் வண்ண விருப்பங்களும் குறைவாகவே உள்ளன. கருப்பு மற்றும் தங்கம் என இரு வண்ண விருப்பங்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.

இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Oppo A17 விலை ரூ.12,499 என நிர்ணயம் செய்யப்பட்டதை நினைவுப் படுத்துகிறோம். இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பகம் (Storage) வழங்கப்பட்டது. இந்த மொபைலும் கருப்பு மற்றும் ஆரஞ்சு ஆகிய இரு வண்ணங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.