கேரளா உடனான எல்லையை திறக்க முடியாது என்றும் அவ்வாறு செய்தால் மரணத்தை விருப்பப்பட்டு தழுவுவதற்கு சமம் என்றும் முன்னாள் பிரதமரும் கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான தேவ கவுடாவுக்கு எழுதிய கடிதத்தில் எடியூரப்பா கூறியுள்ளார்.
முன்னதாக மனிதாபிமான அடிப்படையில் கேரளாவுடனான எல்லையை திறக்க வேண்டும் என தேவ கவுடா கர்நாடக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கிடையில் தமிழகத்துடனான எல்லையை கேரளா மூடி விட்டது என்று வெளியான தகவல்களை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் மறுத்துள்ளார்.
தமிழ் மக்கள் தங்களுக்கு சகோதரர்கள் என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கேரள முதல்வரின் கருத்துக்கு மகிழ்ச்சி தெரிவித்ததுடன் இரு மாநில மக்களின் சகோதரத்துவம் மேலும் வளரும் என்றும் தெரிவித்தார்.