இந்தியா

பிரதமருக்கு கடிதம் எழுதுவதில் என்ன தேச துரோகம் ? - பிரபலங்கள் கேள்வி 

webteam

பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியவர்கள் மீது தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதற்கு திரையுல பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

ஜெய் ஸ்ரீராம் என்பதை முழக்கமாக பயன்படுத்தி சிறுபான்மையினர் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணி ரத்னம், அபர்னா சென், ராம்சந்திர குஹா உள்ளிட்ட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர். கும்பல் தாக்குதல் வன்முறைக்கு கண்டனம் மட்டும் போதாது என்றும், சிறுபான்மையினர் தாக்கப்படுவதை தடுக்க ஜாமினில் வெளிவரமுடியாத பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

பெரும்பாலான மக்கள் போற்றும் ஜெய் ஸ்ரீராம் என்ற மந்திரத்தைப் ஆயுதமாக்கி போர் முழக்கமாகப் பயன்படுத்துவதை தடுக்கவும் அவர் வலியுறுத்தியிருந்தனர். அந்தக் கடிதத்தில் இயக்குனர் மணிரத்னம், அனுராக் காஷ்யப், அனுராதா கபூர் சமூக சேவகர்கள், எழுத்தாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் உள்ளிட்ட 49 பேர் கையெழுத்திட்டுள்ளனர். 

மோடிக்கு கடிதம் எழுதிய 49 பேர் மீது நாட்டின் நற்பெயரை கரைப்படுத்துதல், பிரிவினைவாத போக்குகளுக்கு ஆதரவளித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் பீகார் மாநிலத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வ‌ழக்கில், 49 பேர் மீது தேசத்துரோகம், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் சர்தார் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியவர்கள் மீது தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்து திரையுலகினர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு பேட்டி கொடுத்துள்ளனர். 

அதில், கடிதம் எழுதிய பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது திகைப்பை ஏற்படுத்துவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். 

மேலும், “சமூகத்தில் அந்தஸ்தில் இருப்பவர்களுக்கே இந்த நிலைமை என்றால் அடித்தட்டு மக்களின் நிலையும் என்னவாக இருக்கும். மோடி ஒரு நாட்டின் தலைவரான பிறகு அவர் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருப்பதை நிறுத்த வேண்டும். அவர் இரு தரப்பின் கருத்துகளையும் கேட்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி இது போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்குவதன் மூலம், சமுதாயத்தில் அச்சத்தைத் தூண்டுகிறார். கேள்வி கேட்பதால் எங்களை நீதிமன்றங்களில் நிறுத்த முடியும் என்றால், யாரும் உண்மையை பேச முன்வர மாட்டார்கள்” என பிரகாஷ்ராஜ் தெரிவித்தார். 

பிரதமருக்கு கருத்து தெரிவிப்பது கூட நீதிமன்றத்தால் தேசத் துரோகச் செயலாக கருதப்படுவது வருத்தமளிக்கிறது என திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜீவ் மேனன் தெரிவித்துள்ளார். பிரதமருக்கு கடிதம் எழுதியதில் தேச விரோதம் என்ன இருக்கிறது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து இயக்குனர் வெற்றிமாறன் கூறுகையில், பிரதமருக்கு கடிதம் எழுதுவது, நாட்டில் சிறிது காலமாக நிலவி வரும் கொலைகள் போன்ற பயங்கரமான செயலுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு மிகவும் நாகரிகமான மற்றும் ஜனநாயக முறையிலான வழி என தெரிவித்துள்ளார்.