இந்தியா

'இரு பெண்கள் மட்டுமே தரிசனம் செய்தனர்' : கேரள அமைச்சர் விளக்கம்

webteam

சபரிமலையில் இரு பெண்கள் மட்டுமே தரிசனம் செய்துள்ளதாக தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கேரள சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். 

கேரளமாநிலம், கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து, மலப்புரத்தை சேர்ந்த கனகதுர்கா ஆகியோர் கடந்த மாதம் சபரிமலையில் தரிசனம் செய்தனர். இதற்கு இந்து அமைப்புகளும், ஐயப்ப பக்தர்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். மாநிலம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமாகின. போலீசார் அவர்களை ரகசிய இடத்தில் தங்க வைத்தனர்.

பின்னர், வீட்டுக்குச் சென்ற கனகதுர்கா, தன்னை தனது மாமியார் தாக்கியதாக போலீசில் புகார் செய்தார்.இதையடுத்து இருவருக்கும் பாதுகாப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இருவரின் வீடுகள், அவர்கள் பணிபுரியும் அலுவலகங்களிலும் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. மேலும்  அரசு மகளிர் காப்பகத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சபரிமலை கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சென்றது தொடர்பாக தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார். அப்போது, சபரிமலைக்கு இதுவரை இரு பெண்கள் மட்டுமே தரிசனம் செய்துள்ளதாகவும் இலங்கை பெண் தரிசனம் செய்தது குறித்து உறுதி செய்த பின்னரே கூற முடியும் என கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையைச் சேர்ந்த சசிகலா என்பவர் சபரிமலை தரிசனம் செய்ததாகக் கூறப்பட்ட தகவல் உறுதியாகவில்லை என விளக்கம் தந்துள்ளார்.