இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 184 படகுகளில் 30 படகுகளை மட்டுமே மீட்க முடியும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை அரசின் வெளியுறவுத்துறை அதிகாரிகளின் உயர்மட்ட பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து, கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நாகை, தஞ்சை மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 184 இந்தியப் படகுகளை, விடுவிக்க நீதிமன்றங்களுக்கு பரிந்துரை செய்தது. இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் யாழ்பாணம், ஊர்காவல்துறை, மன்னார், திரிகோணமலை, மற்றும் புத்தலம் நீதிமன்றங்கள் படகுகளை விடுவிக்க உத்தரவிட்டது.
இலங்கை கடற்படையினரால் விடுவிக்கப்பட்ட படகுகளை தமிழக மீன் துறை அதிகாரிகள் மற்றும் மீனவசங்க பிரதிநிதிகள், மீன் வளத்துறை கூடுதல் இயக்குநர் ஜானிடோம் வர்கீஸ் தலைமையில் 16 பேர் கொண்ட ஆய்வுக் குழு, படகுகளை பார்வையிடுவதற்காக கடந்த 10ந்தேதி இலங்கை சென்றனர். இதனைதொடர்ந்து காரைநகர், கிராஞ்சி, காங்கேசன் துறைமுகம், மன்னார், திரிகோணமலை, மற்றும் கல்பட்டி உள்ளிட்ட துறைமுகப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 184 படகுகளை பார்வையிட்டனர். இதில் 90 சதவித படகுகள் கடலில் மூழ்கி முற்றிலும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் துருப்பிடித்து கிடந்தது. மேலும் 30க்கும் குறைவான படகுகள் மட்டுமே மீட்கும் நிலையில் உள்ளதாக ஆய்வுக்குழுவில் சென்ற தமிழ்நாடு விசைப்படகு செயலாளர் சேசுராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் தங்களது வாழ்வாதாரமே இந்தப்படகுகள் தான் ஆகவே சேதமடைந்த படகுகளுக்கு மத்திய மாநில அரசுகள் முழு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், நல்ல நிலையிலுள்ள படகுகளை இன்னும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் இன்று தாங்கள் ஆய்வு செய்த அறிக்கைகளை தமிழக மீன் துறை அதிகாரிகள் இலங்கை கடற்படை அதிகரிகளிடம் சமர்பிக்க உள்ளதாக தெரிவித்த அவர் நாளை தமிழகம் திரும்ப உள்ளதாகவும் கூறினார்.